சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிறுவுவதற்காக உருவாக்கப்படும் கருணாநிதியின் உருவச்சிலை மாதிரியை, திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு 8 அடி உயரமுள்ள வெண்கல சிலை அக்கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட உள்ளது. இதற்கான சிலை வடிவமைக்கும் பணி, திருவள்ளூர் மாவட்டம் புதுப்பட்டு பகுதியில் நடைபெற்று வருகிறது. கருணாநிதியின் உருவ சிலையை, தீனதயாளன் என்பவர் வடிவமைத்து வருகிறார்.

இந்நிலையில் சிலையின் மாதிரி வடிவத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிற்பக் கூடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். சிலையை பார்வையிட்டபின், அதில் சிற்சில மாறுதல்கள் செய்யுமாறு சிற்பியிடம் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

விரைவில் புதிதாக வடிவமைக்கப்படும் கருணாநிதி சிலை, அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்படும் என திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.