ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது பதிவு செய்யப்பட்ட வீடியோ வெளியான விவகாரம் குறித்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் திவாகரன் மகன் ஜெயானந்த் கொடுத்துள்ள வாக்குமூலம் டி.டி.விக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. கடந்த 5-ம் தேதி திவாகரன் மகன் ஜெயானந்தை நேரில் ஆஜராகுமாறு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சென்னையில் விசாரணைக்கு ஆஜரான ஜெயானந்திடம் சுமார் இரண்டரை மணி நேரம் விசாரணை நடைபெற்றது. 

விசாரணையின் போது ஜெயலலிதாவுக்கும் –ஜெயானந்துக்கும் இடையிலான உறவு, ஜெயலலிதாவை எப்போது பார்த்தீர்கள்? என்பன் போன்ற கேள்விகளை முதலில் நீதிபதி ஆறுமுகசாமி கேட்டுள்ளார். அதற்கு தான் அவ்வளவாக ஜெயலலிதாவுடன் பழகியது இல்லை என்றும், சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை சந்தித்ததாகவும், பின்னர் ஜெயலலிதா அப்பலோவில் இருந்த போது அறை கண்ணாடி வழியாக அவரை பார்த்ததாகவும் ஜெயானந்த் பதில் அளித்ததாக சொல்லப்படுகிறது.  இதனை தொடர்ந்து ஜெயலலிதாவின்சிகிச்சை தொடர்பான வீடியோக்கள் இருப்பதாக ஊடகங்களுக்கு ஜெயானந்த் அளித்த பேட்டி குறித்து ஆறுமுகசாமி கேள்வி எழுப்பியதாகவும்,  மேலும் அந்த வீடியோக்களை எங்கு வைத்திருக்கிறீர்கள் என்றும் ஆறுமுகசாமி ஜெயானந்திடம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.அதற்கு தன்னிடம் அந்த வீடியோ இல்லை என்றும், தனது அத்தையான சசிகலாவிடம் அந்த வீடியோ இருந்ததை வைத்து தன்னிடம் இருப்பதாக கூறியதாக ஜெயானந்த் பதில் அளித்ததாக ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  சசிகலா தான் சிறையில் உள்ளாரே? இப்போது அந்த வீடியோ யாரிடம் இருக்கிறது என்று ஜெயானந்திடம் நீதிபதி ஆறுமுகசாமி வினவிய போது, அதற்கு அந்த வீடியோக்கள் தற்போது டி.டி.வி வசம் இருக்கலாம் என்று ஜெயானந்த் பதில் அளித்ததாக சொல்லப்படுகிறது.எத்தனை வீடியோக்கள் டி.டி.வியிடம் இருக்கும் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு நிறைய இருக்கிறது என்று ஜெயானந்த் பதில் அளித்தாகவும் கூறப்படுகிறது. தங்கள் வசம் உள்ள வீடியோக்கள் என்று கூறி தினகரன் தரப்பு சில மாதங்களுக்கு முன்னரே ஒரு பெண் டிரைவை ஆறுமுகசாமி ஆணையத்திடம் ஒப்படைத்துவிட்டது. ஆனால் தற்போது ஜெயானந்த் கூறியுள்ள தகவலின்படி வேறு சில வீடியோக்கள் டி.டி.வி தினகரனிடம் இருப்பதாக கருதி, அவரை விசாரரணைக்கு வரும்படி ஆணையம் அழைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.