உக்ரைனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் வட இந்திய மாணவர்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுப்பதாகவும் முக்கிய அறிவிப்புகளை இந்தியில் அறிவிப்பதாகவும் திமுக புகார் தெரிவித்த நிலையில் அது உண்மையில்லை என இந்திய மாணவி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.
உக்ரைன் மீது கடந்த 24 ஆம் தேதி முதல் ரஷ்யா தாக்குதல் நடத்திவருகிறது. இந்த தாக்குதலில் உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களான கீவ், கார்கிவ் ஆகிய பகுதிகள் ரஷ்யாவின் தாக்குதலில் உருகுலைந்தன. மேலும் இந்த தாக்குதலில் இருநாடுகளை சேர்ந்த பலரும் உயிரிழந்துள்ளனர். இந்த போதிலும் போர் தொடர்ந்து வந்தது. இந்த போரால் உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்கள் உள்பட அனைத்து இந்தியர்களும் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதை அடுத்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், மனிதாபிமான அடிப்படையில் உதவ முடிவு செய்யப்பட்டது. அதன்படி வோல்னோவாகா, மரியுபோல் நகரங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேறும் வகையில் தற்காலிக போர் நிறுத்ததை ரஷ்யா அறிவித்தது. இதனிடையே உக்ரைன் வான்வெளியும் தடை செய்யப்பட்டிருப்பதால் அபரேஷன் கங்கா திட்டம் மூலம், அங்குள்ள இந்தியர்களை தரை வழியாக அண்டை நாடுகளான உர்மேனியா, ஹங்கேரி, போலந்து மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளுக்கு அழைத்து வந்து, பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் மத்திய அரசு இந்தியா அழைத்து வருகிறது.

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஏர் ஏசியா இந்தியா ஆகிய விமான சேவை நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இவை தவிர இந்திய விமானப்படையும் இந்த மீட்பு பணியில் இணைந்துள்ளது. ஒரே நேரத்தில் அதிகப்படியானோரை அழைத்து வர ஏதுவாக விமானப்படையின் சி-17 ரக விமானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 63 விமானங்களில் சுமார் 13,300 இந்தியர்கள் தாய்நாடு திரும்பியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே உக்ரைனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் வட இந்திய மாணவர்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுப்பதாகவும் முக்கிய அறிவிப்புகளை இந்தியில் அறிவிப்பதாகவும் திமுக புகார்களை அடுக்கியது. இந்த நிலையில் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட இந்திய மாணவி ஒருவர் இந்த புகார் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அவர் பேசுகையில், மீட்பு பணியை மத்திய அரசு சிறப்பாக மேற்கொண்டதாக தெரிவித்தார். மேலும் திமுகவின் புகார் குறித்து பேசிய அவர், வட இந்திய மாணவர்களுக்கு இந்திய தூதரகம் முன்னுரிமை கொடுப்பதாக கூறியது தவறு என்றும் அனைத்து இந்திய மாணவர்களையும் மீட்பதில் தான் இந்திய அரசு தீவிரமாக ஈடுபட்டதாகவும் மீட்கப்பட்ட இடத்தில் தமிழக மாணவர்களை விட வட இந்திய மாணவர்கள் அதிகம் இருந்ததால் அதிக அளவில் அவர்கள் மீட்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும் தமிழிலும் முக்கிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டதாகவும் அவர் விளக்கம் அளித்தார். இதனை குறிப்பிட்டு பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை, தனது டிவிட்டர் பக்கத்தில், உக்ரைனில் இருந்து திரும்பிய தமிழ் மாணவர்கள் உண்மைகளை மிகத் தெளிவாக வெளிப்படுத்துகிறார்கள், திமுகவின் வழக்கமான பேச்சு, இம்முறை எடுபடவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
