வடகிழக்கு பருவமழை, மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில், மூன்று நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.நேற்று காலை நிலவரப்படி, அதிகபட்சமாக,கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவில் மற்றும் கீழணையில், 12 செ.மீ., மழை பெய்துள்ளது. 

மயிலாடுதுறை, லால்பேட்டை, 8; ஜெயங்கொண்டம், மணல்மேடு, 7; நன்னிலம், திருவாரூர், நாகை, திருத்துறைப்பூண்டி, 6; தரங்கம்பாடி, துவாக்குடி, அதிராம்பட்டினம், பொன்னேரி, 5 செ.மீ., மழை பெய்துள்ளது. சிதம்பரம், சீர்காழி, கும்பகோணம், அரியலூர், திருவையாறு, திருவிடைமருதுார், மன்னார்குடியில், 4 செ.மீ., மழை பதிவாகிஉள்ளது.

வரும் நாட்களுக்கான வானிலை நிலவரம் குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:தமிழக கடற்பகுதியை ஒட்டி நிலவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், தமிழகம், புதுச்சேரியில், பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்யும். 

கடலுார், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலுார், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களில், இன்று சில இடங்களில் கன மழையும், சில இடங்களில் மிக கன மழையும் பெய்யும். 

நாளையும், நாளை மறுநாளும், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய உள்மாவட்டங்களில், பெரும்பாலான இடங்களில், மிதமான மழை பெய்யும்; சில இடங்களில் கன மழையும், ஓரிரு இடங்களில், மிக கன மழையும் பெய்யலாம்.சென்னையில் இன்று, மிதமானது முதல், கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

மிக கன மழை பெய்யும் வாய்ப்புள்ள, 10 மாவட்டங்களுக்கு, 'ஆரஞ்ச் அலெர்ட்' எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் குமரி கடல் பகுதிகளில், இன்றும், நாளையும் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளது.மாலத்தீவு பகுதிகளில், நாளை சூறாவளி காற்று வீசும். எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என, வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதனிடையே தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று நள்ளிரவு மழை கொட்டி வருகிறது. சென்னையில் இன்று காலை பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. எழும்பூர், கிண்டி, வேளேச்சேரி, வடபழனி, கோயம்பேடு, தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.