சேலம்
 
பசுமை வழிச்சாலைக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன் என்றும் அனைத்து அமைப்புகளையும் ஒன்று திரட்டி இந்த திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவேன் என்றும் ஜாமீனில் வெளியே வந்த கல்லூரி மாணவி வளர்மதி தெரிவித்தார்.

சேலம் - சென்னை எட்டு வழி பசுமை சாலைத் திட்டத்திற்காக சேலம் அருகே உள்ள ஆச்சாங்குட்டப்பட்டியில் கடந்த மாதம் நில அளவீடு செய்யும் பணி நடந்தது. அப்போது அங்குவந்த வீராணம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி வளர்மதி இந்த திட்டத்துக்கு எதிராக பேசினார். இதையடுத்து வீராணம் காவலாளர்கள் வளர்மதியை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையில் சென்னையில் நடந்த விழா ஒன்றில் வளர்மதி பங்கேற்று வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக அவர் மீது வடபழனி காவலாளர்கள் வழக்குப்பதிந்தனர். இந்த வழக்கில் அவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு வடபழனி காவலாளர்கள் கைது செய்தனர்.

இந்த இரண்டு வழக்குகளிலும் நீதிமன்றம் மூலம் ஜாமீன் பெற்ற வளர்மதி நேற்று பிற்பகல் சேலம் மத்திய சிறையில் இருந்து வெளியே வந்தார். அதன்பின்னர் அவர் அங்கு 8 வழி பசுமை சாலைக்கு எதிராக முழக்கமிட்டார். 

பின்னர் மாணவி வளர்மதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், "சேலம் - சென்னை இடையே அமைய உள்ள 8 வழி பசுமை சாலை திட்டத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் பொதுமக்களையும், எங்களை போன்றவர்களையும் காவலாளர்கள் கைது செய்கின்றனர். 

இவர்களில் பொதுமக்களை காவலாளர்கள் விட்டுவிட்டு எங்களை மட்டும் சிறையில் அடைக்கின்றனர். இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

பசுமை வழிச்சாலைக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன். மேலும், அனைத்து அமைப்புகளையும் ஒன்று திரட்டி இந்த திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவேன்" என்று அவர் கூறினார்.