Asianet News TamilAsianet News Tamil

நேரம் இருக்கும்போது தூத்துக்குடிக்கு வருவேன் - காணொளி காட்சிமூலம் மாணவியிடம் பேசிய பிரதமர் மோடி...

I will come to Thoothukudi if i have time - Prime Minister Modi speaking with student through video conference
I will come to Thoothukudi if i have time - Prime Minister Modi speaking with student through video conference
Author
First Published Jun 7, 2018, 9:48 AM IST


தூத்துக்குடி
 
பிரதமர் மோடியை தூத்துக்குடிக்கு நேரில் வரும்படி அழைத்த பள்ளி மாணவியிடம், "நேரம் இருக்கும்போது வருவேன்" என்று அவர் கூறினார்.

மத்திய அரசு மூலம் மாணவ  -  மாணவிகளின் ஆராய்ச்சி திறனை மேம்படுத்துவதற்காகவும், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்காகவும் இந்தியாவில் உள்ள 5000 பள்ளிகளில் நவீன ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆய்வகங்களில் மாணவ - மாணவிகளே ஆய்வுகள் செய்து புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கலாம். அதன்படி மாணவ - மாணவிகள் உருவாக்கிய கண்டுபிடிப்புகள் ‘அடல் மாரத்தான்‘ என்னும் போட்டிக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

இந்தியா முழுவதிலும் இருந்து 600 படைப்புகள் இந்தப் போட்டியில் இடம் பெற்றன. இதில் தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஜீவிதா பெத்துக்கனி, சுரேகா ஆகியோர் உருவாக்கிய சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெற்று இயற்கை முறையில் விவசாயம் செய்வது குறித்த படைப்பும் இடம்பெற்றது. 

இதில் சிறந்த 100 படைப்புகள் தேர்வு செய்யப்பட்டன. அதன்பின்னர் அந்த படைப்புகள் மேலும் மேம்படுத்தப்பட்டன. அதன்பிறகு 30 படைப்புகள் தேர்வு செய்யப்பட்டன. 

இதில் தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பள்ளி மாணவிகள் உருவாக்கிய கண்டுபிடிப்பும் தேர்வு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட பள்ளி மாணவ - மாணவிகளிடம் பிரதமர் நரேந்திர மோடி காணொளி  காட்சி மூலம் கலந்துரையாடி வருகிறார். 

நேற்று அவர் கோவா, அமிர்தசரஸ் ஆகிய இடங்களில் உள்ள பள்ளி மாணவர்கள், தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பள்ளி மாணவிகள் ஆகியோருடன் ‘வீடியோ கான்பரன்சிங்‘ மூலம் கலந்துரையாடினார்.

தூத்துக்குடி பள்ளி மாணவிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடியபோது, "இந்த ஆய்வகம் பயனுள்ளதாக இருக்கிறதா? இதனை எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள்? 

இந்த ஆய்வகத்தை படிப்பை தவிர வேறு எந்தவிதமான கண்டுபிடிப்புகளுக்கு பயன்படுத்தி மாணவர்கள் வருகின்றனர்? 

நீங்கள் இந்த கண்டுபிடிப்பு சம்பந்தமாக ஏதேனும் விவசாயியை பார்த்தீர்களா? உங்கள் வயதில் இதனை கண்டுபிடித்து இருப்பது மிகப்பெரிய சாதனை. இதனை நல்ல முறையில் மேம்படுத்த வேண்டும்" என்று தெரிவித்தார். 

அதற்கு பதிலளித்து மாணவி ஜீவிதா பெத்துக்கனி பேசும்போது, "ஆய்வகம் மிகவும் பயன் உள்ளதாகவும், நன்றாகவும் இருக்கிறது. இதன்மூலம் 1000-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயன்பெற்று வருகிறோம். இதனால் பல்வேறு படைப்புகளை உருவாக்க முடியும் என்று நம்புகிறோம். 

நாங்கள் விவசாயிகளை சந்தித்து பேசி உள்ளோம். நீங்கள் எங்கள் பள்ளிக்கு வர வேண்டும். நீங்கள் தூத்துக்குடி வந்து எங்கள் ஆய்வகத்தை பார்க்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார். 

அதற்கு பிரதமர் மோடி, "உங்கள் அழைப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு நேரம் இருக்கும்போது தூத்துக்குடி வந்து உங்களை சந்திப்பேன்" என்று அவர் தெரிவித்தார். 

இந்த நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மனோகரன், நேர்முக உதவியாளர் சங்கரய்யா மற்றும் அலுவலர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios