சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த வி.கே.தஹில்ரமானியை மேகாலயா ஐகோர்ட்டுக்கு மாற்ற சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழு பரிந்துரைத்தது. இதையடுத்து அவர் தன் பதவியை கடந்த 6-ந்தேதி ராஜினாமா செய்தார்.

இவரது ராஜினாமா கடிதம் கடந்த 13-ந்தேதி ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவரது ராஜினாமா நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. தமிழகம் முழுவதும் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று மெட்ராஸ் பார் அசோசியேஷன் சார்பில் தஹில் ரமணிக்கு பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது. இதில், கலந்து கொண்டு பேசிய அவர்,, பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓராண்டுக்கு மேலாகத் தலைமை நீதிபதியாக பணியாற்றியது பெருமையளிக்கிறது. 

மும்பையை ஒப்பிடுகையில் தட்பவெப்ப நிலை, சாலை வசதி, உள்கட்டமைப்பு வசதி என அனைத்திலும் சென்னை சிறந்து விளங்குகிறது. இதனால் எனது கணவருடன் சென்னையில் குடியேற விரும்புவதால், இங்கு வீடு வாங்கியுள்ளோம் என தெரிவித்தார்.

சென்னையில்  பணியாற்றிய காலத்தில் 5,040 வழக்குகளை முடித்து வைத்ததை திருப்தியாக உணர்கிறேன் என்றார். இதற்காக உறுதுணையாக இருந்த நீதிபதி துரைசாமிக்கு நன்றி எனக் கூறியுள்ளார். தனக்கு ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு அளித்த நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.