தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல மங்கலத்தைச் சேர்ந்தவர் நாகராஜன் என்ற புல்லட் நாகராஜன் . ரவுடியான புல்லட் நாகராஜன் மீது நகைபறிப்பு, வழிப்பறி, கொலை மிரட்டல், உள்பட 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுரை மத்திய சிறையில் கொலை வழக்கில் கைதாகி இருந்த ரவுடி நாக ராஜனின் அண்ணனை பரிசோதிக்க வந்த பெண் டாக்டரை அவர் தகாத வார்த்தையில் பேசியதால் அங்கு சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டாக உள்ள ஊர்மிளா, நாகராஜன் அண்ணன் மீது நடவடிக்கை எடுத்தார்.

இது குறித்து ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்ததும் புல்லட் நாகராஜனிடம் அவரது அண்ணன் தெரிவித்தார். இதனால் புல்லட் நாகராஜன் போலீஸ் சூப்பிரண்டு ஊர்மிளா மீது ஆத்திரம் அடைந்தார்.

உடனே வாட்ஸ்அப்பில் பேசி சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு ஊர்மிளாவிற்கு புல்லட் நாகராஜன் மிரட் டல் விடுத்தார். தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக புல்லட் நாகராஜனின் வாட்ஸ்அப் மிரட்டல் வைரலாக பரவியது. அதே போன்று புல்லட் நாகராஜன் தென்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மதனகலாவிற்கும் வாட்ஸ்அப் மூலம் மிரட்டல் விடுத்து பேசினார்.

இது  தொடர்பாக அவர்கள் அளித்த புகாரை அடுத்து புல்லட் நாகராஜனை போலீசார் பெரியகுளத்தில் கைது செய்யப்பட்டார். முதலில் அவர் திருச்சி சிறையிலும், பின்னர் வேலூர் சிறையிலும் அடைக்கப்பட்டார்.

இது தொடர்பாக புல்லட் நாகராஜனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனக்கு  தெரிந்த  போலீஸ் ஏட்டு ஒருவர் சரக்கு வாங்கி கொடுத்து போதை ஏற்றி விட்டு பெண் போலீஸ் சூப்பிரண்டுக்கு மிரட்டல் விடுக்க வைத்து மாட்டிவிட்டு விட்டதாக கூறியுள்ளார்.

தான் ஒரு டம்மி பீஸ் என்றும், மது போதையில் போலீஸ் அதிகாரியையும், இன்ஸ்பெக்டரையும் வாட்ஸ்அப்பில் பேசி மிரட்டியதாக தெரிவித்துள்ளார். ஆனாலும் போலீஸ் அடியில் இருந்து தப்பிப்பதற்காக புல்லட் நாகராஜன், மது போதையில் ஏட்டு பேசி சிக்க வைத்து விட்டதாக கூறி நாடகம் ஆடுகிறானா? அவருடன் தொடர்பில் உள்ள போலீஸ் ஏட்டு யார் என தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே புல்லட் நாகராஜன் மீது உள்ள 70 வழக்குகளை வைத்து அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.