எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த ஒரு வருடகாலமாக நடைபெற்றது. இதன் நிறைவுநாள் விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் இன்று நடக்கிறது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதிலும்  இருந்து எம்.ஜி.ஆர். ரசிகர்கள், மகளிர் அணியினர், பொதுமக்கள் என 7 இலட்சம் பேர் வரை கலந்து கொள்வார்கள் என அதிமுக தரப்பில் கூறப்பட்டது. 


 
இதனை அடுத்து, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக தென்னகத்தில் இருந்து எம்.ஜி.ஆர். ரசிகர்கள், மகளிர் அணியினர், பொதுமக்கள் என ஏராளமானோர் சென்னையை நோக்கி வந்து கொண்டுள்ளனர். நேற்று முதலே அவர்கள் சென்னையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். 

நேற்று நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதிலும் இருந்து  ஆம்னி பேருந்துகள், கார்கள், வேன்கள், பேருந்துகள் என சென்னையை முற்றுகையிடும் வகையில் அவர்களது வருகை உள்ளது. தென்னகத்தின் ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்து 2 அல்லது 3 பேருந்துகளுக்கு மேல் வாகனங்கள் சென்னையை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.


அச்சிறுபாக்கம் முதல் மதுராந்தகம் வரை, திருச்சி - சென்னை நெடுஞ்சாலை ஆகிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தாம்பரம் - செங்கல்பட்டு பகுதிகளில்தான் அதிகம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சாதாரண நாட்களின்போதே அப்பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படும். இந்த நிலையில், சென்னை வருகை தரும் அதிமுகவினரின் வாகனங்களால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் ஊர்ந்து செல்வதாகவும், இதனால் செங்கல்பட்டில் செக்போஸ்டில் இருந்து தாம்பரம் வருவதற்கு பல மணி நேரம் காலதாமதமாவதாக வாகன ஓட்டிகள் கூறுகின்றனர். அதேபோல் தாம்பரத்தில் இருந்து சைதாப்பேட்டை வரை கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.