வட கிழக்கு பருவ மழை, கடந்த ஆண்டு ஏமாற்றியது. ஆனால் இந்த ஆண்டு கடந்த 28-ந் தேதி முதல் வடகிழக்கு பருவ மழை பரவலாக பெய்யத் தொடங்கி மக்கள் மனங்களை குளிர வைத்து வருகிறது. வங்க கடலில் உருவான மேலடுக்கு சுழற்சி, தொடர் மழைக்கு வழிவகுத்தது.

கடலோர மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் பருவ மழை வெளுத்து கட்டுகிறது. இயல்பான மழை 44 செ.மீ. என்கிற நிலையில் 39 செ.மீ. மழை இதுவரை பெய்திருக்கிறது. தொடர் மழையால் கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

இன்று ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் அதிகன மழை பெய்யும் என்றும் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கோவை மாவட்டம்  மேட்டுப்பாளையம் அருகே நடூர் - ஏடிகாலனி பகுதியில் தனியாருக்கு சொந்தமான காம்பவுண்ட் சுவர் இடிந்து, அருகில் உள்ள 4 வீடுகளின் மீது விழுந்துள்ளது. இதில் 4 வீடுகளில் இருந்த 13 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.

இதையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து 10 பேரின் உடல்களை மீட்டுள்ளனர். 4 வீடுகளில் இருந்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.