தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதத்திற்குப் பிறகு மழை என்பதே அறவே இல்லாமல் இருந்தது. அது மட்டுமல்லாமல் வரலாறு காணாத அளவுக்கு வெயில் கொளுத்தி வருகிறது.  தமிழகத்தின் பல பகுதிகளில்  வெயில் 100 டிகிரிக்கு மேல்  வெளுத்து வாங்கி வருகிறது. தேர்தல் பிரச்சாரம் கூட செய்ய முடியாத அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

இந்த நிலையில், இன்று தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் பலத்த மழை முதல் லேசான மழை பெய்து வருகிறது. அதன்படி, நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை முருகன்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் பலத்தக் காற்றுடன் கன மழை பெய்தது.

ராமநாதபுரம், பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் இன்று கன மழை பெய்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உதகை, பிங்கர்போஸ்ட் பகுதிகளில் மழை பெய்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கொடைக்கானலில் கடந்த 2 மாதங்களாக மழை பெய்யாததால், கடும் வறட்சி காரணமாக பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது.  பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலிலும் ஈடுபட்டு வந்தனர். மலைப் பகுதிகளில் காட்டுத் தீப்பிடித்து எரிந்தது. 


 
இந் நிலையில், கடந்த 2 நாள்களாக கொடைக்கானலில்  பகலில்  கடுமையான வெயிலும், மாலையில் குளிர்ந்த காற்றும் வீசியது. இதனைத் தொடர்ந்து, நேற்று  இரவு திடீரென மழை பெய்தது. இடி, மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்ததால், பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.

கொடைக்கானலில் நேற்று இரவு ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை கொட்டித் தீர்த்த நிலையில்,  இன்றும் மழை கொட்டியது. ஆனந்தபுரி, நாயுடுபுரம், அண்ணாநகர், வட்டகாணல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.. தொடர்ந்து வறட்சியான வானிலை நிலவிய நிலையில் தற்போது மழை பெய்து வருவது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளில் இன்றும் மழை பெய்தது. 

சென்னை மக்கள் கோடை வெப்பத்தால் வாடி வதங்கினாலும், பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது என்ற செய்தியைக் கேட்டு மனம் குளிர்ந்துள்ளனர்.