தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துக்குப் பிறகு மழையே பெய்யவில்லை. அதே நேரத்தில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் கடுமையான குளிரும், மூடுபனியும் இருந்தது. இந்நிலையில்  கடந்த 10 நாட்களுக்கு மேலாக வெப்பம் நிலவி வருகிறது. பகல் நேரங்களில் அனல் காற்றுடன் கடுமையான வெயிலும் அடிக்கிறது.

அதே போல் இரவி நேரங்களிலும் வெக்கையால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் கன்னியாகுமரி  மாவட்டத்தில் மட்டும் ஓரளவு மழை பெய்தது.

இந்நிலையில் அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மன்னார் வளைகுடா முதல் உள் தமிழகம் வழியாக ராயலசீமா வரை நிலப்பரப்பில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாகவும் கிழக்கு திசைக்காற்று வலுப்பெற்று வருவதன் காரணமாகவும் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த 4 நாட்களுக்கு  கன மழை  பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றுடன்  முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி, ஆயக்குடியில் தலா 3 சென்டி மீட்டர், சங்கரன்கோவிலில் 2 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.