வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக திருவள்ளூர், காஞ்சீபுரம், சென்னை, தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. சென்னையை பொறுத்தமட்டில் பெரம்பூர், மாதவரம், கொடுங்கையூர், வியாசர்பாடி, வேப்பேரி, நுங்கம்பாக்கம், பெரியமேடு, புரசைவாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று காலையில் லேசான மழை பெய்தது.

ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து விமான நிலையம் வரை ஜி.எஸ்.டி. சாலையில் மழைநீர் தேங்கியதால் காலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.

இதே போல் சென்னை புறநகரிலும் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் மிதமான மழை பெய்தது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் எதிர் பார்த்த மழை இல்லை. சில இடங்களில் மட்டும் லேசான மழை கொட்டியது.முட்டுக்காடு, கோவளம், வடநெம் மேலி, புலிக்குகை, மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் போன்ற பகுதிகளில் இரவு முழுவதும் மழை பெய்தது. செவ்வாயன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. விட்டு விட்டு சாரல் மழை பெய்தது.மழை காரணமாக கூவத்தூரை அடுத்த முதலியார்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள படகுக்குழாம் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது.

பொன்னனேரியில் ஒரே நாளில் 13 சென்டிமீட்டர் மழை கொட்டித் தீர்த்தது. ஊத்துக்கோட்டையில் 11செ.மீ, கும்மிடிப்பூண்டியில் 80செ.மீ, திருவள்ளூரில் 3செ.மீ, பூந்தமல்லியில் 3செ.மீ, பூண்டியில் 4செ.மீ, செம்பரம்பாக்கத்தில் 5செ.மீ, சோழவரத்தில் 80செ.மீ, தாமரைப்பாக்கத்தில் 33செ.மீ, செங்குன்றத்தில் 8செ.மீ, கொரட்டூரில் குறைந்தபட்சமாக 2 செ.மீ மழை பெய்தது.

கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்த நிலையில், பூமியை குளிரவைத்த மழை சென்னைவாசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது