தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துப் போனதையடுத்து கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. விவசாயமும் பொய்த்துப் போனது. சென்னையில் இதனால் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு தற்போது வேலூலில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பருவமழை காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாக, கிழக்கு கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும்.  சென்னையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்திருந்தது.

இதனிடையே சென்னை நகர், புறநகர் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.  சென்னையில் புரசைவாக்கம், எழும்பூர், வேப்பேரி உள்ளிட்ட பகுதிகளில் லேசான தூறலும், பின்னர் கனமழையும் பெய்தது.

நேற்று இரவு முதல் பல்லாவரம், அனகாபுத்தூர், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், சோழிங்கநல்லூர், பெருங்குடி, துரைப்பாக்கம், கிண்டி, மீனம்பாக்கம் ஆகிய பகுதிகளிலும், ராமாபுரம், வளசரவாக்கம், போரூர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

இதே போல்  சென்னையில் தற்போது சேத்துப்பட்டு, கோடம்பாக்கம், தியாகராயநகர், கிண்டி, எழும்பூர், திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.