கடந்த மாதம் 4 ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம்  29 ஆம் தேதி முடிந்தவிட்ட போதிலும் தமிழகம்முழுவதுமே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. அதேநேரம் வெப்பச்சலனம் காரணமாக மழையும் ஆங்காங்கே பெய்து வருகிறது.

கடந்த இரு நாட்களாக திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது.

இந்நிலையில் அடுத்த 24 மணிநேரத்தில் வெப்பசலனம் காரணமாக மேற்கு உள்தமிழகம் மற்றும் தென்தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக நீலகிரி, கோவை, தேனி, விருதுநகர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது, 

காற்றின் வேகம் மணிக்கு 30 முதல் 40 கி.மீ வரை வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி, மதுரை, திண்டுக்கல், நாமக்கல், கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பம் இயல்பை விட அதிகரித்து காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில் 'ஜூன் 4 முதல் 7-ம் தேதி வரை தமிழகத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும். ஜூன் 6, 7-ம் தேதிகளில் குறிப்பிட்ட இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னையில் அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 30 டிகிரி செல்சியஸ் பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.