தமிழகத்தில் அக்னிநட்சத்திர காலம் தொடங்கி உள்ள நிலையில் பல ஊர்களில் பகல் நேர வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது.
சென்னையில் 105 டிகிரியாகவும், வேலூரில 111.2 டிகிரியாகவும் பகல் நேர வெப்பநிலை பதிவாகி உள்ளது. இதே போன்று சேலத்தில் 105.8 டிகிரியாகவும், திருச்சியில் 107.6 டிகிரியாகவும், நாமக்கல்லில் 107.6 டிகிரியாகவும், ஈரோட்டில் 105.8 டிகிரியாகவும், கோவையில் 98.6 டிகிரியாகவும், மதுரையில் 111.2 டிகிரியாகவும், திருநெல்வேலியில் 100.4 டிகிரியாகவும், தூத்துக்குடியில் 104 டிகிரியாகவும் வெப்பம் பதிவாகி உள்ளது.

இந்நிலையில் அடுத்த இரு நாட்களுக்கு தமிழகத்தில் அனல் காற்றுவீசும் என்று கூறியுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரையிலாக நேரத்தில் மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளது.

அதே நேரத்தில் தமிழக வளிமண்டலத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்கில் நிலவும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

ஒரு சில இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றும், இடியுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழகத்தை ஒட்டிய வங்க கடல் பரப்பின் தெற்கு மற்றும் தென்மேற்றில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், மீனவர்கள் எச்சரிக்கையுடன் மீன்பிடிக்க செல்ல வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.