குட்கா முறைக்கேடு வழக்கில் இன்ஸ்பெக்டர் சம்பத்திடம் 7 மணி நேரத்துக்கு மேலாக சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர். அதில், கூட்டாளிகள் பலர் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குட்கா ஊழல் வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் வீடுகள் உள்பட 40க்கு மேற்கண்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்தனர்.

பின்னர், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில்முருகன், கலால் அதிகாரி பாண்டியன் உள்பட 5 பேரை கைது செய்து விசாரித்தனர்.

அதில் வந்த தகவலின்படி உதவி கமிஷனர் மன்னர்மன்னன், இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோரும் விசாரணை வளையத்துக்கு சேர்க்கப்பட்டனர். இதைதொடர்ந்து உதவிகமிஷனர் மன்னர் மன்னன், இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோருக்கு சம்மன் அனுப்பினர்.

இந்நிலையில் இன்ஸ்பெக்டர் சம்பத், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார். கிடங்கு  உரிமையாளர் மாதவராவின் டைரியில் இவரது பெயர் இடம்பெற்றிருந்ததோடு, கடந்த வாரம் நடைபெற்ற சோதனையில் இவரது வீட்டில் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. 

2011 முதல் செங்குன்றம் தீர்த்தக்கரையன்பட்டில் குட்கா கிடங்கு செயல்பட்டு வரும் நிலையில் 2013-ல் தான் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது. அதன் பிறகு 2016-ம் ஆண்டு வருமான வரி சோதனையில் சிக்கும் வரை தடை விதிக்கப்பட்ட போதை பொருட்களை தயாரித்து விநியோகம் செய்து வந்த கிடங்கு காவல்துறைக்கு தெரிந்துதான் இயங்கியது என தெரிந்தது.

இதில், உயர் அதிகாரிகள், அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் சிலர் சம்பந்தப்பட்டு இருப்பதாக இன்ஸ்பெக்டர் சம்பத் கூறியதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.