தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி அரசுக்கே திருப்பி அனுப்பினார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி அரசுக்கே திருப்பி அனுப்பினார். திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் கூட்டத்தொடரை கூட்டி நீட் விலக்கு மசோதாவை கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றியது. இதில் பாஜக உறுப்பினர்கள் நால்வர் தவிர மற்ற அனைத்து தமிழ்நாட்டு கட்சிகளும் தேசிய கட்சியான காங்கிரஸும் இணைந்ததால் ஒருமனதாக நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்குப் பிறகு குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நீட் விலக்கு மசோதாவை தமிழ்நாடு அரசு அனுப்பிவைத்தது. ஆனால் அதனை பல மாதங்களாக ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருந்தார். நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினே நேரில் வலியுறுத்தியும் ஆளுநர் இசையவில்லை. இதனால் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து வலியுறுத்த தமிழக எம்பிக்கள் நினைத்தனர்.

ஆனால் அவர்களை சந்திக்காமல் வாசலில் இருந்தவாறே விரட்டாமல் அமித் ஷா விரட்டியடித்தார். முதல் மூன்று முறை பொறுத்துக்கொண்ட திமுக எம்பி டிஆர் பாலு, 4ஆம் முறையும் இப்படியே நடக்க கோபமடைந்தார். அதன் வெளிப்பாடாகவே ஆளுநர் பதவி விலக வேண்டும் என தெரிவித்தார். அமித் ஷாவை எதிர்த்து திமுகவினர் விமர்சனத்தை முன்வைத்தனர். இதற்குப் பின்பே அவர் எம்பிக்களை சந்தித்தார். அவரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இச்சூழலில் குடியரசு தினத்தன்று ஆளுநர் அனுப்பிய வாழ்த்து செய்தியில் நீட் தேர்வுக்கு ஆதரவான வரிகள் இடம்பெற்றிருந்தன. அதாவது நீட் தேர்வு வந்தபின்னர் அரசுப் பள்ளி மாணவர்கள் அதிகளவில் மருத்துவ படிப்பில் இணைவதாக கூறியிருந்தார். இது பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டது. இச்சூழலில் நீட் விலக்கு மசோதாவை அரசுக்கே திருப்பி அனுப்புவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நீட் விலக்கு மசோதா குறித்தும் தமிழக அரசால் அமைக்கப்பட்ட நீட் ஆய்வு குழுவின் அறிக்கையையும் ஆளுநர் ஆய்வு செய்தார். அதேபோல நீட் தேர்வுக்கு முன்னர் இருந்த நிலையையும் இப்போதைய நிலவரத்தையும் ஆளுநர் ஒப்பிட்டு பார்த்தார். அந்த வகையில் அரசு அனுப்பிய நீட் விலக்கு மசோதா கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்களுக்கு எதிராக உள்ளது. ஆகவே இதனை தமிழக சபாநாயகருக்கே திருப்பி அனுப்பப்படுகிறது. இதுகுறித்து பிப்ரவரி 1 ஆம் தேதியே சபாநாயகரிடம் ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுவிட்டது. மசோதா குறித்து தமிழக சட்டப்பேரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேலும் நீட் விலக்கு மசோதா உச்ச நீதிமன்ற உத்தரவு எதிராக உள்ளது. அதாவது ஏழை மாணவர்களை பொருளாதார ரீதியாக சுரண்டுவதிலிருந்து நீட் தேர்வு காப்பதாக நீதிமன்றம் கூறியுள்ளது. அதற்கு முற்றிலும் மாறாக மசோதா இருக்கிறது. அதனால் திருப்பி அனுப்பப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
