தமிழிசைக்கு எதிராகவும், பா.ஜ.க.வுக்கு எதிராகவும் கருத்து கூறிய மாணவி சோபியாவின் பாஸ்போர்ட் முடக்க சதி நடப்பதாக, அவரது தந்தை சாமி குற்றம்சாட்டியுள்ளார்.

பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றார். அந்த விமானத்தில்,  ஆராய்ச்சி மாணவியான, தூத்துக்குடியை சேர்ந்த சோபியாவும் பயணம் செய்தார். விமானத்திற்குள்ளேயும், விமான நிலையத்திலும் தமிழிசையை பார்த்து, வாக்குவாதம் செய்த அந்த மாணவி, பாஜக ஒழிக என்று கோஷமிட்டார்.

இதையடுத்து, அந்த இளம்பெண்ணுக்கு எதிராக விமான நிலைய அதிகாரிகளிடம் தமிழிசை சவுந்தரராஜன் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார், உடனடியாக சோபியாவை கைது செய்து, நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர், ஜாமினில் சோபியா விடுதலை செய்யப்பட்டார்.

இதற்கிடையே, தன்னையும், தனது மகள் லூயிஸ் சோபியா மற்றும் குடும்பத்தினரையும், தமிழிசை மற்றும் பாஜகவினர் தொடர்ந்து மிரட்டி வருவதாக, தந்தை சாமி குற்றம்சாட்டினார். இது தொடர்பாக, தூத்துக்குடி புதுக்கோட்டை காவல் நிலையத்தில் எழுத்துபூர்வமாக புகார் அளித்தார்.

இந்நிலையில், பா.ஜ.க. மற்றும் தமிழிசைக்கு எதிரான கருத்துகளை தெரிவித்ததற்காக, தனது மகளின் பாஸ்போர்ட்டை முடக்க, மத்திய அரசு சதி செய்வதாக, அவரது தந்தை சாமி பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இவ்வாறு மிரட்டி தங்களை பணிய வைக்க முடியாது என்ற அவர், மகளின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டால், நீதிமன்றத்தை நாடுவோம் என்று, அவர் மேலும் தெரிவித்தார்.