Asianet News TamilAsianet News Tamil

காட்டு காட்டுனு காட்டும் பேய் மழை... கட்டுக்கடங்காமல் வெளுத்து வாங்குவதால் தத்தளிக்கும் தலைநகர்!

going to rain with high intensity for next 1 hour



சென்னையில் கடந்த இரு தினங்களாக பெய்துவந்த தொடர் கன  மழையால் தாழ்வானப் பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெரும்பாலான இடங்களில் வெயில் சுட்டெரித்த நிலையில் தற்போது மீண்டும் கனமழை காட்டு காட்டுனு காட்டிக்கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன்காரணமாக பல இடங்களில் மழை கொட்டித் தீர்த்தது. இன்று அதிகாலை முதல் சென்னையில் மழை ஓய்ந்திருந்தது. அதேநேரத்தில் சில்லென காற்றும் வீசி வந்தது. மழை ஓய்ந்து வெயில் காய்ந்ததால் சென்னையில் இயல்பு நிலை மெல்ல திரும்பியது. கடந்த சில தினங்களாக சென்னையை சீண்டிப் பார்த்த சில் சில் மழையால் சீரியல் கூட பார்க்க முடியாமல் குடும்பஸ்திரிகள் அதிகாலையிலேயே தங்களது கணவர்களை உசுப்பிவிட்டு வெதர் மேன் சொன்னதைப்போல அவசர அவசரமாக பழைய அழுக்கு துணிகளை துவைத்து காயப்போட வைத்துள்ளனர்.

இன்று அதிகாலையிலிருந்து அடங்கியிருந்த வடகிழக்கு பருவமழை மீண்டும் வெளுத்துவாங்கிக்கொண்டிருக்கிறது. சென்னையில் சாந்தோம் தி நகர், கோடம்பாக்கம் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, மெரினா, சேப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பிய்த்துக்கொண்டு ஊற்றுகிறது. அதுமட்டுமல்ல புறநகர் பகுதிகளான குரோம்பேட்டை, பல்லாவரம் உள்ளிட்ட இடங்களிலும், சென்னையை சுற்றியுள்ள பகுதியிலும் பலத்த காற்றுடன் கழமழ சும்மா காட்டு காட்டுனு காட்டிவருகிறது.

தற்போது கட்டுக்கடங்காமல் வெளுத்து வாங்கும் இந்த பேய்மழை இன்னும் ஒரு மணி நேரத்திற்கு விடாமல் அடித்து நொறுக்கும் என தி தமிழ்நாடு வெதர்மேன் முகநூலில் பதிவிட்டுள்ளார். அடுத்த….ஒரு மணிநேரத்துக்கு மழை நிற்காது…..(தி தமிழ்நாடு வெதர்மேன் பதவில் இருந்து) கடந்த 2015ம் ஆண்டு, டிசம்பர் 1-ந்தேதிக்கு பின், மிக, மிக கனமழை சென்னையில் தற்போது பெய்து வருகிறது. நகரில் பல இடங்களில் கடந்த 2 மணிநேரத்துக்குள் 100 மி.மீட்டர் மழை பதிவானது. அடுத்த ஒரு மணிநேரத்துக்கு மழையின் தீவிரம் மேலும் அதிகமாகும். 

சென்னையில் அடுத்த ஒரு மணிநேரம் மழை நிற்கப்போவதில்லை. சென்னையை நோக்கி அதிகமான மேகங்கள் வருவதை பார்க்க முடிகிறது. அடுத்த ஒரு மணிநேரமும் கொட்டித் தீர்க்கப்போகிறது. மிகவும் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வாருங்கள்… இல்லாவிட்டால் வர வேண்டாம். என பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன், செய்தியாளர்கள் சந்திப்பின்போது, இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் என்று கூறினார். 

தமிழகத்தில் பெருமழை பெய்யும் என்றும் இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், பிபிசி வானிலை செய்தி பிரிவு டுவிட்டர் பக்கத்தில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அந்த தகவலில் இந்தியா மற்றும் இலங்கையில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அதில் பதிவிட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. சனிக்கிழமை அன்று கடலோர ஆந்திராவிலும் மழை பெய்யும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது சுமார் 50 செ.மீ. அளவு மழை பெய்யலாம் என்றும் இதனால் மிகப் பெரிய வெள்ளத்துக்கும், நிலச்சரிவுக்கும் வாய்ப்புள்ளதாவும் பிபிசி அந்த டுவிட்டரில் கூறியுள்ளது. 

தற்போது பெய்து வரும் மழைக்கே சென்னை தத்தளித்து வரும் நிலையில், பிபிசி வானிலை செய்தி பிரிவின் அறிக்கை, சென்னை மக்களுக்கு மேலும் பீதியை ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளது கடந்த 2015 ஆம் ஆண்டு ஒரே நாளில் 50 செ.மீ. மழை பெய்யும் என்று பிபிசி முன் கூட்டியே தெரிவித்திருந்தது. அதைப் போலவே பெருமழை பெய்து, நகரமே வெள்ளத்தில் மிதந்தது. இந்த வெள்ளம் காரணமாக பல்வேறு உயிரிழப்புகளும், பொருட்சேதங்களும் ஏற்பட்டது. தமிழகத்தில் இந்த வருடமும் 50 செ.மீ. மழை பெய்யும் என்று பிபிசி வானிலை செய்தி பிரிவு தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தம், அடுத்த சில நாட்களில் வெள்ளத்தை ஏற்படுத்தும் அபாய கட்ட அளவுக்கு மழையை கொண்டு வரும் என்று மற்றொரு டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. 

Video Top Stories