காதலியை கற்பழிக்க முயன்ற திருடனை கத்தியால் குத்தி காதலன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் மீது வழிப்பறி, திருட்டு வழக்குகள் உள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு வடசென்னிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் அடிவார குத்துபட்டுக் கிடந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த கார்த்திகேயனை, அடிவாரத்தில் உள்ள அரசு கல்லூரி மாணவர்கள் பார்த்து மருத்துவமனையில் சேர்ப்பதற்காக மலையில் இருந்து கீழே தூக்கி வந்துள்ளனர். ஆனால், வழியிலேயே கார்த்திகேயன் உயிரிழந்தார்.

உடலிலிலும், உடலின் அருகே ரத்தக்கறை படிந்த பெண்ணின் துப்பட்டா மற்றும் ரத்தக்கறையுடன் கத்தி கிடந்தது. இதுகுறித்து தலைவாசல் போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவரும், மாணவி ஒருவரும் வடசென்னிமலை கோயிலுக்கு வந்திருந்தனர்.

அப்போது அங்கு வந்த கார்த்திகேயன் அவர்களிடம் வழிப்பறி செய்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் மாணவர், கார்த்திகேயனை குத்திகொலை செய்தது தெரிந்தது.

இதையடுத்து மாணவியை பிடித்து விசாரித்தபோது அவர் அளித்த வாக்குமூலத்தில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நான் தொழுதூர் தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறேன்.

அதே கல்லூரியில் தமிழரசன் என்பவரும் 2ம் ஆண்டு படித்து வருகிறார். நானும் அவனும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வருகிறோம். சம்பவத்தன்று வடசென்னிமலை கோயிலுக்கு சென்று, அங்கு மறைவான பகுதியில் பேசிக்கொண்டிருந்தோம்.

அப்போது, கார்த்திகேயன், மற்றும் அவரது நண்பர்  மாரிமுத்து, கத்தியை காட்டி பணம், நகைகளை கேட்டு மிரட்டினர்.

அதை கொடுத்த பின்னர், போதையில் இருந்த கார்த்திகேயன் என்னிடம் தவறாக நடக்க முயன்றார். என்னை இங்கேயே விட்டுவிட்டு, தமிழரசனை அங்கிருந்து போகுமாறு மிரட்டினார். இதனால் ஆத்திரமடைந்த தமிழரசன், கார்த்திகேயனிடம் இருந்து கத்தியை பறித்து அவரை குத்தினார்.

இதை பார்த்த அவரது நண்பர் மாரிமுத்து அங்கிருந்து ஓடிவிட்டார். நாங்களும் அங்கிருந்து தப்பியோடிவிட்டோம். இவ்வாறு அந்த மாணவி தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழரசனின் உறவினர்கள், அவரை தலைவாசல் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று முன்தினம் இரவு ஒப்படைத்தனர்.

இதையடுத்து போலீசார் தமிழரசனை கைது செய்தனர். மேலும், கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றதாக மாரிமுத்து மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.