சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், தனக்குக்கீழ் பணிபுரிந்த துணை ஆணையர்கள் மீது சரமாரி குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளார். 

குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ சோதனை நடத்தப்பட்ட நிலையில், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். சென்னை, நொளம்பூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது, தவறான தகவலின் அடிப்படையில் என் மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது என்றார்.

வெற்றுக் காகிதத்தில் எழுதிய தகவல்களின் அடிப்படையில் என் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக கூறினார். திமுக வழக்கறிஞர் மனுவில் எனது பெயர் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்றும். குட்கா ஊழல் வெளிச்சத்துக்கு வந்தது ஏப்ரல் மாதத்தில் தான்; நான் சென்னை மாணக காவல் துறை ஆணையரானது செப்டம்பர் மாதத்தில் தான் என்றார்.

இது பற்றி மாதவரத்தில் அதிக நாட்கள் பணியாற்றிய உளவுத்துறை துணை ஆணையராக இருந்த விமலாவிடம் தான் விசாரித்ததாகவும், அதற்கு, குட்கா ஊழல் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று விமலா அறிக்கை அளித்ததாகவும் கூறினார். இது குறித்து விசாரணை நடத்துமாறு தமிழக அரசுக்கு கடிதம் எழுதினேன் என்றார்.குட்கா ஊழல் விவகாரத்தை விட்டுவிடும்படி துணை ஆணையர் ஜெயக்குமார் சொன்னதாக விமலா என்னிடம் கூறினார்.குட்கா விவகாரத்தில் தன்னை குறி வைத்து செயல்படுவது மிகவும் கவலை அளிக்கிறது என்றார்.

துணை ஆணையர் ஜெயக்குமாருக்கு ஏராளமான பொறுப்புகளை அளித்தேன். ஆனால் அவர் சரிவர பணியாற்றவில்லை. துணை ஆணையர் ஜெயக்குமாரின் பணி விவர அறிக்கை குறித்து அவருக்கு எதிர்மறையான அறிக்கையை அளித்தேன். ஜெயக்குமாரின் பணியில் அதிருப்தி இருந்ததால் பணி உயர்வின்போது குறைந்த மதிப்பெண் அளித்தேன் என்று ஜார்ஜ் ஐபிஎஸ் கூறினார்.