கஜா  புயல் கடந்த மாதம் 15-ந் தேதி நள்ளிரவு நாகப்பட்டினம் அருகே கரையை கடந்தது. புயலின் தாக்குதலில் காவிரி டெல்டா மாவட்டங்களான நாகை, தஞ்சை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. குறிப்பாக டெல்டா மாவட்டங்களிலும், புதுக்கோட்டை மாவட்டத்திலும் பேரழிவு ஏற்பட்டது.  . புயல்-மழைக்கு 63 பேர் பலியாகினர்.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப்பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அரசு சார்பிலும், பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் சார்பிலும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நாகை அருகே கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் தலைமையில்  நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ், பாதிக்கப்பட்ட மக்களுக்கு 500 பசுக்கன்றுகளை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாய பெருமக்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் விதமாக 500 பசுக்கன்றுகள் வழங்கப்படுகிறது. அவர்களுக்கான வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்துக்கான முதல் படியாக பசுக்கன்றுகள் உதவும் என தாம் நம்புவதாக தெரிவித்தார்.

இதே அரசும், தன்னார்வலர்களும் , விவசாயத்திற்குரிய மரக்கன்றுகள், சாகுபடிக்கான செலவுகள், கால்நடைகள் வாங்கி தந்தால் அவர்களுக்கு பயம் நீங்கி தன்னம்பிக்கை பிறக்கும் என ஜி.வி.பிரகாஷ்  கூறினார்.

மத்திய, மாநில அரசுகள் வேகமாக தங்களது பணிகளை முடுக்கி விட வேண்டும். மின்சார பாதிப்பால் கிராமங்கள் இருண்டு கிடக்கிறது. விரைவில் அவர்கள் வெளிச்சத்தை பார்க்க வேண்டும் என்றார்.


இதே போல் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், கஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு அய்யப்பந்தாங்கலில் உள்ள குடியிருப்போர் சங்கம் சார்பில் போர்வைகள், அரிசி, சோப்பு, கொசுவலை உள்பட ரூ.10 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை அனுப்பிவைத்தார். அந்த பொருட்களும் முகாம்களில் இருப்பவர்களுக்கு வழங்கப்பட்டன.