உசிலம்பட்டியில் மண்டபம் இலவசம், ஐஸ் பாக்ஸ் இலவசம் உள்ளிட்ட வாக்குறுதிகளோடு சமூக வலைதளங்கள் வாயிலாக திமுக பெண் வேட்பாளர் ஒருவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உசிலம்பட்டியில் மண்டபம் இலவசம், ஐஸ் பாக்ஸ் இலவசம் உள்ளிட்ட வாக்குறுதிகளோடு சமூக வலைதளங்கள் வாயிலாக திமுக பெண் வேட்பாளர் ஒருவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளுடைய பதவிக்காலம் முடிவடைந்தும் நீண்ட காலம் அவற்றுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுமென தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான கூட்டணிகள் அரசியல் கட்சிகளிடம் இறுதியாகிவிட்ட நிலையில், அந்தந்த கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவிக்கத் தொடங்கிவிட்டன.

இந்நிலையில் உசிலம்பட்டியில் பெண் வேட்பாளர் ஒருவர் தனது தேர்தல் அறிவிப்பில், இல்ல விழாவிற்கு மண்டபம் இலவசம், இறந்த வீட்டிற்கு உடலை வைக்க ஐஸ் பாக்ஸ் இலவசம் என வாக்குறுதியுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 11 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் சகுந்தலா என்ற பெண் வேட்பாளர் தனது தேர்தல் வாக்குறுதியாக அந்த வார்டு பகுதியில் உள்ள மக்கள் இல்ல விழா வைத்தால் தன்னுடைய மண்டபம் இலவசம் என்றும் இறப்பு வீடாக இருந்தால் உடலை வைக்க ஐஸ் பாக்ஸ் இலவசம் என்றும், பிறப்பு சான்று, இறப்பு சான்று 24 மணி நேரத்தில் பெற்றுத் தரப்படும் எனவும், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வாக்களிக்குமாறு சமூக வலைதளங்கள் வாயிலாக வேட்பாளர் சகுந்தலாவின் மகன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவரது அறிக்கையில், 11 வார்டு வாக்காளர் இல்லங்களில் நடைபெறும் விஷேசங்களுக்கு மண்டபம் இலவசமாக வழங்கப்படும். 11 வது வார்டு மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், சாக்கடை வசதி, தெரு குழாய்கள், தெரு விளக்குகள், சாலை வசதிகள் அனைத்தும் உடனடியாக சரிசெய்து தரப்படும். 11வது வார்டு வாக்காளர்களுக்கு பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் நகராட்சியில் உடனடியாக எந்தச் செலவுமின்றி வாங்கித் தரப்படும். முதியோர் மற்றும் விதவைகள் உதவித் தொகை உடனடியாக எந்தச் செலவுமின்றி வாங்கித் தரப்படும். 11வது வார்டு இறந்தவரின் உடலை பாதுகாப்பாக வைப்பதற்கு ஐஸ் பெட்டி இலவசமாகத் தரப்படும். மேலும் வாக்காளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் விரைவாக நிறைவேற்றித் தரப்படும் என குறிப்பிட்டுள்ளார்.