சென்னை வண்ணாரப்பேட்டை- ஏ.ஜி.- டி.எம்.எஸ். இடையே புதிய பாதையில் மெட்ரோ ரெயில் சேவை நேற்று முன்தினம் தொடங்கியது. இதைத்தொடர்ந்து வண்ணாரப்பேட்டை - விமான நிலையம்வரை முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல் - பரங்கிமலை வரை இரண்டாவது வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில் சேவை முழுமை அடைந்துள்ளது.

இந்த 2 வழித்தடத்திலும் நேற்றும் இன்றும் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டதால் அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

நேற்று முன்தினம் மெட்ரோ ரெயிலில் 2 லட்சத்து ஆயிரத்து 556 பேர் இலவசமாக பயணம் செய்தனர். புதிய சேவையை ஒவ்வொரு முறை தொடங்கும் போதும் இலவச பயண திட்டத்தை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்து வருகிறது. பொதுமக்கள் மெட்ரோ ரெயிலை அதிகளவு பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு பஸ், மின்சார ரெயில், பறக்கும் ரெயில் பயணத்திற்கு இணைப்பு வசதியை அளித்து வருவதால் பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சென்னை மெட்ரோ ரெயில்களில் நாளையும் இலவச பயணம் செய்யலாம் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது