Asianet News TamilAsianet News Tamil

புதுக்கோட்டையில் நான்கு நாட்களாக பெய்துவரும் கனமழை; 30-க்கும் மேற்பட்ட குளங்களில் மழை நீர்வரத்து அதிகரிப்பு... 

Four days heavy rain in Pudukottai Rain water harvesting in more than 30 ponds
Four days heavy rain in Pudukottai Rain water harvesting in more than 30 ponds
Author
First Published Jul 4, 2018, 11:19 AM IST


புதுக்கோட்டை 

புதுக்கோட்டையில் தொடர்ந்து நான்கு நாட்களாக பெய்துவரும் பரவலான மழையால் 30-க்கும் மேற்பட்ட குளங்களில் மழைநீர் வரத்து அதிகரித்துள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. 

இதேபோல, புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட மாலையீடு, பூங்காநகர், பெரியார்நகர், ராஜகோபாலபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வரத்துவாரிகளில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் மழைநீர் கழிவுநீருடன் சேர்ந்து ஆறுபோல சாலைகளில் ஓடுகிறது. இதனால் அந்தப் பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

இந்த மழையின் காரணமாக புதுக்கோட்டையில் உள்ள பல்லவன் குளம், புதுக்குளம், காந்திபூங்கா குளம், திருக்கோகர்ணம் பெரியகுளம், புதுஅரண்மனை குளம், மாப்பிள்ளையார்குளம், நைனாரி குளம், அடப்பன்குளம் உள்பட நகரில் உள்ள 30-க்கும் மேற்பட்ட குளங்களுக்கு மழை நீர்வரத்து அதிகரித்துள்ளது. 

இன்னும் சில நாட்கள் தொடர்ந்து மழை பெய்தால் புதுக்கோட்டை நகரில் உள்ள அனைத்து குளங்களும் நிறைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.  தற்போது குளத்திற்கு தண்ணீர் வரத்தொடங்கி இருப்பதால் புதுக்கோட்டை நகர் பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் புதுக்கோட்டை நகர் பகுதிகளில் வரத்துவாரிகளில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அகற்றும்படி மாவட்ட ஆட்சியர் கணேஷ் அதிரடியாக உத்தரவிட்டார். அதன்படி நேற்று நகராட்சி சார்பில் வரத்துவாரிகளில் தூர்வாரும் பணி தொடங்கியது. 

பெரியார்நகர், ராஜகோபாலபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்பிரமணியன் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் வரத்துவாரிகளை தூர்வாரினர். இந்த பணிகள் இன்னும் 4 நாட்களில் முடிவடையும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios