இங்கிலாந்து நாட்டை சேர்ந்த  பொறியாளர் கிரகாம் வில்லியம் லியன்  என்பவரும்  போலந்து நாட்டை சேர்ந்த ஆராய்ச்சி மாணவி சில்வியா பிலாசிக்கும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

அவர்கள் இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் திருமணத்திற்கு பிறகு தேனிலவுக்காக வெளிநாடு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அப்போது  இந்தியாவை தேர்ந்தெடுத்தனர்.

யுனெசுகோ உலக பாரம்பரிய வரைபடத்தில் இடம்பெற்ற ஊட்டி மலை ரயிலில் பயணிக்க விரும்பி,ரயில்வே டூரிஸ்ட் [ஐ.ஆர்.சி.டி.சி.] மூலம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சிறப்பு ரயிலில் பயணம் செய்ய 3  லட்சம்  ரூபாய் பணம் செலுத்தி முன் பதிவு செய்திருந்தனர்

இதையடுத்து நேற்று  காலை 9.00 மணிக்கு  அவர்கள் இருவரும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் வந்தனர்.நீராவி மூலம் இயங்கும் மலை ரயிலின் சிறப்புகளை கேட்டறிந்தனர்.

அவர்களுக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலைய அதிகாரி வேதமாணிக்கம் விளக்கி கூறினார்.

முதல் முறையாக இந்தியா வந்துள்ளோம்.இந்தியாவில் அதுவும் யுனெசுகோ பாரம்பரியம் மிக்க ஊட்டி மலை ரயிலில் பயணம் செய்வது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.மிகவும் அழகான அமைதியான நாடாக இந்தியா திகழ்கிறது என அவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் இருவரும் சிறப்பு ரயில் மூலம் ஊட்டிக்கு புறப்பட்டு சென்றனர்.அவர்களுடன் ஐ.ஆர்.சி.டி.சி சுற்றுலா அலுவலர் சசிதர் வழிகாட்டியாக உடன் சென்றார்.