புதுக்கோட்டை மாவட்டம் தேக்காட்டூர் அருகே உள்ள ஆண்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் அகத்தியன் கரூரில் வேலை பார்த்து வந்த இவர், விபத்தில் சிக்கி அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அகத்தியன் நேற்று உயிரிழந்தார். 

இதனையடுத்து மருத்துவமனையில் உள்ள அமரர் ஊர்தி மூலம், புதுக்கோட்டை மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள அவரது சொந்த ஊருக்கு அகத்தியனின் சடலம் அனுப்பி வைக்கப்பட்டது. அவரின் சடலத்துடன் அவரது உறவினர்களும் அமரர் ஊர்தியில் அனுப்பி வைக்கப்பட்டனர். 

அமரர் ஊர்தி ஆண்டிப்பட்டி கிராமத்தை நோக்கி பயணித்த 15 நிமிடங்களுக்கு உள்ளாகவே கீரனூர் அருகே திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த ஓட்டுனர் அமரர் ஊர்தி சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு உடனடியாக அகத்தியனின் சடலத்தோடு அவரது உறவினர்களையும் கீழே இறங்க செய்தார். 

இதனையடுத்து கீரனூர் தீயணைப்புத்துறையினர் வந்து தீயை அணைப்பதற்குள் அமரர் ஊர்தி முற்றிலும் எரிந்து நாசமானது. நடுரோட்டில் அமரர் ஊர்தி தீப்பிடித்து எரிந்ததால் அவ்வழியே அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து அகத்தியனின் சடலம் மாற்று வாகனம் மூலம் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. அமரர் ஊர்தியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.