பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டம் பொருந்தும் என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். 

பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டம் பொருந்தும் என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் 2022-23 பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது. இன்று நிதித்துறை கோரிக்கைகளுக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்தார்.

நிதியமைச்சர் அறிவிப்பு:

அப்போது, பேசிய அவர், " "2021-2022 ஆம் ஆண்டிற்கான இறுதி துணை மதிப்பீடுகளை சமர்ப்பித்தார். துணை மானியக் கோரிக்கைகளை விளக்கிக் கூறும் விரிவான அறிக்கையினை முன் வைக்கின்றேன். இந்த அவையில் வைக்கப்பட்டுள்ள இந்தத் துணை மதிப்பீடுகள் மொத்தம் 10,567.01 கோடி ரூபாய் நிதி ஒதுக்கத்திற்கு வகை செய்கின்றன. இதில், 8,908.29 கோடி ரூபாய் வருவாய் கணக்கிலும் 1,658.72 கோடி ரூபாய் மூலதனம் மற்றும் கடன் கணக்கிலும் அடங்கும்.

2022 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதியன்று 2021-2022 ஆம் ஆண்டிற்கான முதல் துணை மதிப்பீடுகள் சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் “புதுப்பணிகள்” மற்றும் “புது துணைப்பணிகள்” குறித்து ஒப்பளிப்பு செய்யப்பட்ட செலவினங்களுக்கு சட்டப்பேரவையின் ஒப்புதலைப் பெறுவது இத்துணை மதிப்பீடுகளின் முக்கிய நோக்கமாகும்.2021-2022 ஆம் ஆண்டிற்கான இறுதி துணை மதிப்பீடுகளை இம்மாமன்றம் ஏற்று இசைவளிக்க வேண்டுகின்றேன் என்று அவர் கூறியிருந்தார்.

மாணவிகளுக்கு உதவித்தொகை:

மேலும், அரசுப் பள்ளிகளில் 6 முதல்12-ம் வகுப்பு வரை படித்து உயர் கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகையாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று ஏற்கெனவே 2022-23 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்து. இந்தத் திட்டம் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கும் பொருந்தும் என்பதை அறிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.

பட்ஜெட் மீதான விவாதத்தின் இறுதியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று பட்ஜெட் மீதான கேள்விகளுக்கு பதில் உரையாற்றி, அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜனும், எம்.ஆர்.கே பன்னீர் செல்வமும் அனைவரது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் பெற்றிருக்கின்றனர் என்றார். முக்கியமான துறையானது நிதித்துறையை பெற்றிருக்கும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மிகச் சிறப்பான வகையில் தன்னிடம் உள்ள அனுபவங்களைக் கொண்டும், வெளிநாடுகளில் பெற்றிருக்கக்கூடிய நல்ல அம்சங்களையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டும் பட்ஜெட் பணியை சிறப்பாக செய்துள்ளார் என்று புகழாரம் சூட்டினார்.

வேளாண்துறை அமைச்சரும், விவசாயிகளின் மைந்தனாக மாறி, அவரும் தன்னுடைய கடமையை சிறப்பாக நிறைவேற்றியிருக்கிறார். இதுப்போல் ஆண்டுதோறும் நல்ல செயல்பாடுகள் தொடர வேண்டும் என்றும் அந்த நம்பிக்கை தனக்கு உறுதியாக இருப்பதாகவும் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், இருவருக்கும் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

மேலும் படிக்க: தவிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு தாயாகும் தமிழக அரசு..! முதல்வர் ஸ்டாலின் உறுதி