நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி சென்னையில் திமுக, அதிமுகவினர் இடையே தகராறு ஏற்பட்டதில் அதிமுக கட்சியை சேர்ந்தவர் படுகாயமடைந்து ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி சென்னையில் திமுக, அதிமுகவினர் இடையே தகராறு ஏற்பட்டதில் அதிமுக கட்சியை சேர்ந்தவர் படுகாயமடைந்து ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 90 பேரூராட்சிகளில் விறுவிறுப்பாக ஓட்டுப்பதிவு நடந்தது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அமைதியாக ஜனநாயக கடமையை ஆற்றினர். தமிழகத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் கோளாறு தவிர பெரியளவில் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. மதுரை மேலூரில் மட்டும் ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணை பாஜக பூத் ஏஜென்ட் கிரிராஜன் அகற்ற கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தான் சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதிக்கு உட்பட்ட 39வது வார்டில் அதிமுக, திமுகவினர் இடையே இன்று மாலை திடீரென்று தகராறு ஏற்பட்டது. புதுவண்ணாரப்பேட்டை தேசிய நகர் பகுதியில் அமைந்துள்ள சென்னை உருது துவக்கப்பள்ளி வாக்குச்சாவடி அருகே திமுக, அதிமுகவினர் நின்றபோது ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறியது. இதுபற்றி அறிந்தவுடன் போலீசார் அங்கு சென்றனர். சிலர் ஓடிய நிலையில் மற்றவர்களை போலீசார் எச்சரித்தும், அறிவுரை வழங்கியும் அங்கிருந்து அனுப்பினர். இருப்பினும் அவர்கள் போலீசார் சென்ற பிறகு மீண்டும் அங்கு வந்தனர். இதையடுத்து சிறிது நேரத்தில் இருதரப்பினரும் அருகே உள்ள தெருக்களில் நடந்து சென்றபோது வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த வாக்குவாதம் முற்றவே திமுகவை சேர்ந்த ராமு என்பவர் தனது ஆதரவாளர்கள் பத்து பேருடன் சேர்ந்து கற்களால் எதிர்தரப்பை தாக்கினர். அதிமுகவின் ராஜு, பிரதீப் ஆகியோர் கற்களால் தாக்கப்பட்டனர். இதில் ராஜு என்பவரின் மண்டை உடைந்தது. ரத்தம் சொட்டச் சொட்ட அவர் கீழே விழுந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் புது வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் படுகாயமடைந்த ராஜூவை அவர்கள் சென்னை ராயபுரம் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுதொடர்பாக புதுவண்ணாரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
