சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட 14வது வார்டில் திமுக - அதிமுகவினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பதற்றம் ஏற்பட்டு உள்ளது.
சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட 14வது வார்டில் திமுக - அதிமுகவினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பதற்றம் ஏற்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள் ,138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் உள்ளிட்ட 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை முதலே பொது மக்களும், அரசியல் தலைவர்களும் , நடிகர் - நடிகைகளும் வரிசையில் நின்று ஆர்வத்துடன் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர். தமிழகம் முழுவதும் சுமார் 2 கோடியே 83 லட்சம் பேர் வாக்களிக்க உள்ள இந்த தேர்தலுக்காக, 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு 1.60 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட 14வது வார்டில் திமுக - அதிமுகவினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பதற்றம் ஏற்பட்டு உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்லையொட்டி, 4 நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்களுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது. இதில், சிவகங்கை நகராட்சி, 14வது வார்டில் உள்ள சாய்பால மந்திர் வாக்குச்சாவடியில் வாக்களிக்க சென்ற பொது மக்களிடம் அதிமுக வேட்பாளர் விமலா தரப்பினர் பணம் கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதற்கு திமுக வேட்பாளர் அழகுமுத்து என்பவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதனால், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறி உள்ளது. இதனால், இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட நிலையில், அங்கிருந்த காகிதங்களை கிழித்தெறிந்தும், தண்ணீர் கேன்கள் மற்றும் நாற்கலிகளை உடைத்து சேதப்படுத்தினர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் கைகலப்பில் ஈடுபட்ட இருதரப்பினரையும் லேசான தடியடி நடத்தி அங்கிருந்து கலைந்து போக செய்தனர். இதனை தொடர்ந்து, அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு சுமார் 1 மணி நேரத்துக்கு வாக்குப்பதிவு நடைபெறவில்லை என கூறப்படுகிறது. இதேபோல், சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட 19, 20வது வார்டுகளிலும் வாக்குப்பதிவின் போது பிரச்சினை ஏற்பட்டதால், அந்த பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குப்பதிவின் போது இருதரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
