. ஃபனி எனப்படும் புயலானது மிகவும் பயங்கர வலிமை வாய்ந்ததாகும். இது சென்னை அருகே கரையை கடந்தால் தண்ணீர் பிரச்சினைகள் தீரும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்தார். 

வங்கக் கடலில் இலங்கைக்கு கிழக்கே கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான வளி மண்டல மேலடுக்கு சுழற்சி வலுப்பெற்று காற்றழுத்தமாக மாறியது. இதனால் தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. 

இந்த நிலையில் தெற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தம் நேற்று வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று மாறியுள்ளது. இது இன்னும் 36 மணி நேரத்துக்குள் ஃபனி புயலாக மாறும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

ஃபனி புயல் குறித்து,  தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக் பதிவில், எல்லா வானிலை அறிக்கைகளும் மெதுவாக புயல் குறித்து ஒரு மித்த கருத்தை கூறி வருகின்றன. ஏராளமான மழை முன்னறிவிப்பு செய்யப்பட்ட புயலானது மழையால் தடுத்து நிறுத்தப்பட்டால் பின்னர் அது மிகவும் தீவிரமடைந்து எந்த பகுதிக்கு செல்கிறதோ அங்கு ஏராளமான மழையை கொடுக்கும் என தெரிவித்துள்ளார்.

ஃபனி புயல் தமிழகத்தில் கரையை கடந்தால் வறட்சி போய் வெள்ளப் பெருக்கு ஏற்படும். இந்த புயல் தமிழகத்துக்கான தானா?  என கணிக்க இன்னும் ஒரு நாள் பொறுத்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். ஆனாலும் 60 சதவீதம் தமிழகத்துக்கு என்றே தெரிகிறது என குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில் . ஃபனி எனப்படும் புயலானது மிகவும் பயங்கர வலிமை வாய்ந்ததாகும் என்றும், இது சென்னை அருகே கரையை கடந்தால், இது அனைத்து தண்ணீர் பிரச்சினைகளையும் தீர்த்துவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

நம் ஊர் ஏரிகள் நிரம்பிவிடும். இது மிகவும் ஆக்ரோஷமானது என்பதால் தண்ணீர் தேவைக்காக நாம் ஆயிரக்கணக்கான  மரங்களை இழக்க வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.