‘கஜா‘ புயல் நேற்று முன்தினம் கரையை கடந்த போது, டெல்டா மாவட்டங்களில் கோரத்தாண்டவம் ஆடியது. சூறைக்காற்றுடன் மழையும் பெய்ததால் திருச்சி மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளிலும் மரங்கள், மின் கம்பங்கள் சரிந்தன. மேலும் வாழைகளும் சேதமடைந்தன.

திருச்சி திருவானைக்காவல், மேலகொண்டையம்பேட்டை, வடக்கு தெருவை சேர்ந்த செல்வராஜ்  என்பவர் அந்த பகுதியில் 1½ ஏக்கர் பரப்பளவில் வாழை பயிரிட்டிருந்தார். அங்குள்ள கூட்டுறவு சங்கத்தில் 2 லட்சம் ரூபாய் கடன் பெற்று விவசாயம் செய்திருந்தார்.

இந்த நிலையில் கஜா‘ புயல் தாக்குதலில் அவரது தோட்டத்தில் இருந்த வாழைகள் அனைத்தும் சாய்ந்து விழுந்து சேதமடைந்தன. தோட்டத்திற்கு சென்ற செல்வராஜ், வாழைகள் சரிந்து கிடந்ததை பார்த்து மனவேதனை அடைந்தார்.

வாழைகள் முழுவதும் சேதமடைந்ததால் கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாது என எண்ணி அவர் புலம்பியுள்ளார். மேலும் தனது மனைவி மற்றும் நண்பர்களிடமும் வாழைகள் சேதமடைந்தது குறித்து புலம்பினார். சேதமடைந்த வாழைகளை தனது செல்போனில் புகைப்படம் எடுத்து வந்திருந்தார். அதனை அவ்வப்போது பார்த்து கவலை அடைந்தார்.

வீட்டில் இருந்து நேற்று முன்தினம் இரவு வெளியே சென்ற செல்வராஜ் தனது நண்பர்களுக்கு மீண்டும் போன் செய்து புலம்பினார். இந்த நிலையில் மாம்பழச்சாலை அருகே காவிரி பாலம் பக்கம் ரெயில் முன் பாய்ந்து அவர் தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையில் அவரை தேடி நண்பர்கள் சென்ற போது தண்டவாளத்தில் செல்வராஜ் பிணமாக கிடந்தது தெரியவந்தது.

வாழைகள் சேதமடைந்ததில் விவசாயி தற்கொலை செய்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இறந்த செல்வராஜ்க்கு சரண்யா என்ற மனைவியும், 2½ வயதில் மகளும் உள்ளனர். செல்வராஜ் தற்கொலை தொடர்பாக திருச்சி ஜங்ஷன் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.