தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. தமிழகத்தின் பல நகரங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டியுள்ளது.

இந்நிலையில் தான் தெற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் பின்னர் அது தமிழகத்தை நோக்கி ஏப்ரல் 29 ஆம் தேதி புயலாக மாறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதற்கு ஃபனி என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

இதனால் கனமழை இருக்கக்கூடும் என்பதால், மேலும், தமிழகத்துக்கு ஏப்ரல் 30, மே 1-ம் தேதி கனமழைக்கான எச்சரிக்கை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. மேலும் புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் 150 கிமீ இருக்கும் என்று சொல்லப்பட்டதால், மீட்பு பணி உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டு வருகின்றன. 


இதையடுத்து நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல பாம்பன், கடலூர், புதுச்சேரி துறைமுகங்களிலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன்,  தற்போதைய நிலவரப்படி ஏப்ரல் 30ஆம் தேதி வட தமிழக கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் அன்றைய தினம் வடதமிழகம் அருகே புயல் வரும், புயலின் நகர்வைப் பொறுத்தே காற்றோ, மழையோ இருக்கும். இது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தெரிவிக்கப்படும் என்றும் பாலசந்திரன் கூறினார்.