தமிழகத்தில் கோடைவெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக ‘கத்தரி’ வெயில் காலம் தொடங்குவதற்கு முன்பே மதுரை, திருத்தணி, வேலூர், கரூர், சேலம், திருச்சி, உள்பட நகரங்களில் வெயில் 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வருகிறது.

வெயில் சுட்டெரிக்கும் அதே வேளையில், தமிழ்நாட்டில் ஆங்காங்கே கோடைமழை பொழிந்து மக்களை குளிர்வித்து வருகிறது. இந்தநிலையில் கோடை வெயிலில் தவிக்கும் மக்களுக்கு மேலும் ஒரு தவிப்பை ஏற்படுத்திடும் வகையில் இந்திய வானிலை ஆய்வு மையம் ஒரு தகவலை நேற்று வெளியிட்டது.

அந்த அறிக்கையில், இந்திய பெருங்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருக்கிறது என்றும், இது அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். பின்னர் வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து புயலாக மாறி, 30-ந்தேதி தமிழக கடற்கரை பகுதிகளில் கரையை கடக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.

அப்போது 90 முதல் 100 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். இதன்காரணமாக தமிழகம், ஆந்திரா மாநிலங்களில் மிக கனமழை பெய்யும் என்றும், மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த புயலுக்கு ஃபனி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக பேட்டி அளித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன், தற்போதைய நிலவரப்படி  ஃபனி புயல்  1,500 கி.மீ. தொலைவில் 85 டிகிரி கிழக்கு திசைப்பகுதியில் இருக்கிறது. இதன் சரியான நகர்வுகள், புயல் கரையை கடக்கும் நேரம் ஆகியவற்றை அடுத்தடுத்த நாளில் தான் சொல்லமுடியும் என தெரிவித்தார்.

இதுகுறித்து 29-ந்தேதிக்கு பிறகே உறுதியாக கூறமுடியும் என்றும்,  28, 29, 30 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் அதிக மழைக்கான வாய்ப்புகள் உள்ளன என்றும் பாசந்திரன் தெரிவித்தார்.