தமிழகத்தின் மிகப்பெரிய ஆசீர்வாதம் மேற்கு தொடர்ச்சி மலைகள். சர்வதேசத்தையும் பொறாமை கொள்ள வைக்குமளவுக்கு அதி அற்புதமான வனத்தையும், வன உயிரினங்களையும் தன்னுள் பொதிந்து வைத்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையின் வயிற்றில் எத்தனையோ விலங்குகள் பிறந்தாலும், யானைகள்தான் அதன் பேரழகு.

தமிழகத்தில் நீலகிரி, கோயமுத்தூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணன்கிரி, தேனி, திருப்பூரின் சில பகுதிகள், திருநெல்வேலியின் சில பகுதிகள், கன்னியாகுமரியின் சில பகுதிகள், திண்டுக்கல்லின் சில பகுதிகள், விருதுநகரின் வெகு சில பகுதிகள் என மேற்கூரிய மாவட்டங்களின் வனங்களில் யானைகள் காணப்படுகின்றன. 

வருடம் தோறும் உணவு, நீர் மற்றும் இனப்பெருக்கத்துக்காக யானைகள் ஓரிடத்தில் துவங்கி மற்றொரு இடத்துக்கு இடம் பெயரும் ‘வலசை போகுதல்’ நிகழ்வுகள் இடம்பெறும். கடந்த சில வருடங்களாக யானைகளின் வலசைப்பாதை காட்டு வழிகளில் மனித ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. இதனால் வழி தவறும் யானைகள், ஊருக்குள் புகுந்து பயிர்களை தின்பதும், மனிதர்களை கொல்வதும், மனிதர்களின் ஆயுதங்களில் சிக்கி இவை சாவதும் வழக்கமாகி இருக்கிறது. 

சில யானைகள் குறிப்பிட்ட காலம் வரை ஓரிடத்தில் இருந்துவிட்டு பின் நகர்ந்து விடும். ஆனால் வெகு சில யானைகளோ பல காலமாக ஓரே இடத்தில் தங்கிவிடும் அரிதாக. இவற்றை அங்கிருந்து அப்புறப்படுத்துவதென்பது மிக மிக சவாலான காரியம். அப்படித்தான் கோயமுத்தூர் மாவட்டத்தில், சிட்டியை ஒட்டிய தடாகம், மாங்கரை வனப்பகுதிகளில் இரண்டு ஆண் யானைகள் சமீப காலமாக செட்டிலாகிவிட்டன. அடிக்கடி இவைகளை பார்ப்பதால் ஒரு அடையாளத்துக்காக விநாயகன், சின்னத்தம்பி என்று ஆளுக்கொரு பெயரை வைத்துவிட்டார்கள் வனத்துறையினரும், அப்பகுதி கிராமத்தினரும். 


விநாயகனை அண்ணன் என்றும், சின்னத்தம்பியை தம்பி என்றும் அடையாளப்படுத்தினராம். அதிலும் கோயமுத்தூர் கிராமத்து இளவட்டங்களோ இன்னும் ஓவராய் போயி ‘வீரம் படத்துல தல அஜித் பேரு விநாயகம். அதுல அவரு செம கெத்து, அது மாதிரியே இந்த விநாயகனும் செம்ம முரட்டு கெத்தான ஆளு. தல யோட தம்பிதான் சின்னத்தம்பி’ என்று ஆனை விஷயத்தில் அஜித் குமாரை இழுத்துவிட்டது கலகலப்பு. 

இந்த பகுதி வளமான விவசாய பகுதி என்பதால், மாலையில் இறங்கி வந்து சாப்பிடுவதும், விடியும் போது காட்டுக்குள் ஓடி ஒளிந்து கொள்வதும் இந்த ரெண்டு பசங்களுக்கும் பொழப்பாக இருந்தது. இவனுங்க இரண்டுமே முரட்டு பீஸுகள்தான் என்றாலும் கூட, விநாயகர் ஓவர் முரடன். முன் நெற்றியும், துதிக்கையும்தான் அவனது பலம். எம்பூட்டு பெரிய சுவற்றையும் எட்டி ஒரு முட்டு முட்டினால் பொதக்கடீர்னு விழுந்துடும். 

இப்படியாக பல காம்பவுண்டுகளின் சுவர்களை இடித்து உள்ளே சென்று வீடுகளின் கிச்சன்களுக்குள் கையை விட்டு உப்பு, சர்க்கரை, புளி, பலவித மாவுப்பவுடர்களை இழுத்துப்போட்டு தின்பது இவனுக்கு வாடிக்கை. சின்னதம்பியும், விநாயகரும் செம்ம தோஸ்துகள்தான். விநாயகன் ஒரு வீட்டை உடைத்து, கிச்சனுக்குள் நோண்டி எடுத்தால் அதே ரூட்டில் வந்து சின்னதம்பியையும் கையை வைத்து கைமா பண்ணுவான். 

ஏதோ பயிரை தின்றோம், வீட்டை உடைத்தோம் என்றில்லாமல் அடிக்கடி ஆளுங்களையும் தூக்கிப் போட்டு துவம்சம் செய்வது இருவருக்கும் வேலையாகிவிட்டது. இதில் வரிசையாக சிலர் உயிரிழந்தனர். இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் ‘ரெண்டு யானைகளையும் பிடிங்க’ என்று வனத்துறையிடம் சண்டை கட்ட துவங்கினர். 

விளைவு, கடந்த சில வாரங்களுக்கு முன்பு காதும் காதும் வைத்தாற்போல் சைலண்டாக ஆபரேஷனில் இறங்கிய வனத்துறை விநாயகனை தூக்கிவிட்டது. மயக்க ஊசிகள் போட்ட பிறகும் மதம் கொண்டு ஆடியவனின் கழுத்தில் ரேடியோ காலரை மாட்டிவிட்டு, பின் அப்படியே லாரியில் ஏற்றி நீலகிரி மாவட்டம் முதுமலையில் இறக்கி விட்டனர். தன் உடலில் புதிதாக சுற்றியிருந்த காலரை துவக்கத்தில் பிடித்து இழுத்து இழுத்து பார்த்து எரிச்சலடைந்த விநாயகன், பிறகு ஒரு கட்டத்தில் அதை விட்டுவிட்டு மேய்ச்சலில் இறங்கிவிட்டான். கடந்த சில நாட்களாக தமிழக எல்லை தாண்டி கர்நாடகாவினுள் விநாயகன் ரவுண்டு அடித்தபடி கர்நாடக பெண் யானைகளை சைட் அடித்துக் கொண்டிருப்பதாக தகவல். 

இந்நிலையில் இப்போது கோயமுத்தூரில் ரெண்டாவது யானையான சின்னத்தம்பிக்கு குறி வைத்திருக்கிறது வனத்துறை. அநேகமாக நீங்கள் இந்த கட்டுரையை வாசித்துக் கொண்டிருக்கும் போதோ அல்லது சில மணி நேரங்களிலோ அல்லது வெகு சில நாட்களிலோ சின்னத்தம்பி யானைக்கு மயக்க ஊசியை சுட்டு, லாரியில் ஏற்றி வனம் கடத்தி விடுவார்கள் என்று தகவல். சின்னத்தம்பி யானையை பிடிப்பதற்காக நீலகிரி மாவட்டத்திலிருந்து முதுமலை எனும் பெரிய கும்கியானை நேற்று அங்கே கொண்டு செல்லபட்டுள்ளது. இது போக ஏற்கனவே இருக்கும் குண்டு குண்டு கும்கிகளையும் வைத்து, சின்னத்தம்பியை சிக்க வைக்கப்போறாங்க. ஆக ‘தல தம்பியை அடிச்சு தூக்க அட்ராசிட்டி பிளான் ரெடியாகுதுங்ணோவ்’ என்று இப்போதே அந்த கிராமங்களில் இளவட்டங்கள் தெறிக்க விடுகிறார்களாம். 

விநாயகனைப் போலவே சின்னத்தம்பிக்கும் காலர் மாட்டப்படுமா என்பது தெரியவில்லை. ஆனால், நீலகிரி வனத்தில் கொண்டு போய் இவனை விடமாட்டார்கள் என்று தகவல். காரணம், சின்னதம்பி வந்துவிட்டதை மோப்ப சக்தியால் உணரும் விநாயகர் வந்து ஒட்டிக் கொண்டால், மீண்டும் ரெண்டும் சேர்ந்து ஆடும் கூத்துக்கு அளவே இருக்காது! என்று வனத்துறையின் சில அதிகாரிகள் ஃபீல் பண்ணுகிறார்கள். 

ஆனால் வேறு அதிகாரிகளோ, சின்னத்தம்பிக்கும் காலரை மாட்டி நீலகிரியிலேயே கொண்டு போய் விடுவோம். மோப்பத்தின் மூலம் இரண்டு யானைகளும் ஒன்று சேர்கிறதா, இரண்டும் பார்த்ததும் எப்படி ரியாக்ட் செய்கின்றன என்பதையெல்லாம் ஆராய்வோம், ஒரு கேஸ் ஸ்டடியாகவே இதை எடுத்துக் கொள்வோம்! என்கிறார்களாம். 

வனத்துறையில் இது குறித்த ஆலோசனை போய்க் கொண்டிருக்கிறது. சின்னத்தம்பிக்கு எப்போது சம்பவத்தை நிகழ்த்தப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
ஆனால் அதேவேளையில் வன உயிரின ஆர்வலர்களோ, விநாயகனை பிரித்த பின் சின்னத்தம்பி தனி ஆளாக அமைதியாகதான் மேய்ந்து கொண்டிருக்கிறான், அவனை தொந்தரவு செய்யாதீங்க! என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். சின்னத்தம்பி சிக்குவானா அல்லது  திட்டமிடப்பட்டுள்ள சம்பவத்தை உணர்ந்து காட்டுக்குள்ளேயே எஸ்கேப் ஆகி தரமாய் தப்பிப்பானா? என்று பட்டிமன்றமே நடக்கிறதாம் கோயமுத்தூரில். 
என்ன நடக்குதுன்னு கவனிப்போம்!