காற்று மாசுபாட்டினை குறைக்கும் வகையில் மின்சார பஸ் இயக்கும் திட்டத்தை  சி-40 ஏஜென்சியுடன் இணைந்து  செயல்படுத்தும் வகையில் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கடந்த மார்ச் 28-ந் தேதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜய பாஸ்கர் , வெளிநாட்டு பிரதிநிதிகள் சென்னையில் 4 நாட்களாக முகாமிட்டு எந்தந்த வழித்தடங்களில் பஸ்களை இயக்குவது, அதற்கான டிரான்ஸ்பார்மர் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் கலந்தாலோசித்து இறுதியாக இத்திட்டம் குறித்த ஆய்வு அறிக்கையை  அளித்துள்ளதாக தெரிவித்தார்..இதையடுத்து வெளிநாடுகளில்  இது போன்ற மின்சார பஸ்களை இயக்கும்போது நடைமுறையில் ஏற்படுகின்ற சிக்கல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும், விரைவில் சென்னையில் இந்த பஸ்களை குறிப்பிட்ட வழித்தடங்களில் இயக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்..மின்சார பஸ்களின் விலை மிக அதிகம். ஆனால் இயக்கப்படும் செலவு குறைவு. இவ்வகை பஸ்களை ஒருமுறை சார்ஜ் செய்தால் 240 கிலோமீட்டர் தூரத்தை 54 பயணிகளோடு பயணிக்கலாம். ஆனால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது தூரம் குறையும். மேலும், பஸ்களை சார்ஜ் செய்யும் நிலையம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

இதையடுத்து அடுத்த சில நாட்களில் சென்னை சாலைகளில் எலெக்ட்ரிக் பேருந்துகள் வலம் வருவதைப் பார்க்கலாம்.