இந்த வரலாறெல்லாம் எடப்பாடிக்கு தெரியாது: முதல்வர் ஸ்டாலின் பாய்ச்சல்!

எடப்பாடி பழனிசாமிக்கு வரலாறு தெரியாது என முதல்வர் ஸ்டாலின் சாடியுள்ளார்

Edappadi palanisamy does not know all this history says TN CM MK Stalin

தமிழகத்தில் நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்கு தேவையான நீர் மேட்டூர் அணையிலிருந்து ஆண்டுதோறும் திறக்கப்படுகிறது. குறுவை, தாளடி, சம்பா என 3 பருவங்களில் நடக்கும் சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படுகிறது.

அந்தவகையில், டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நீரினை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக சேலத்தில் இருந்த முதல்வர் ஸ்டாலின், நேற்று மாலை மேட்டூர் சென்றார். நீர்வளத்துறை ஆய்வு மாளிகையில் தங்கிய அவர், மேட்டூர் அணையில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, வலது கரையில் மேல்மட்ட மதகுகளை மின் விசையால் இயக்கி டெல்டா பாசனத்துக்கு தண்ணீரை திறந்து வைத்தார்.

இன்று முதல் 2024ஆம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி வரை குறுவை, சம்பா, தாளடி பயிர்களின் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணை திறப்பின்மூலம், திருச்சி, தஞ்சை, நாகப்பட்டினம் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து முதல் கட்டமாக வினாடிக்கு 3000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

டெல்டா பாசனத்துக்கு குறுவை சாகுபடிக்காக 90 ஆண்டுகளில் 19ஆவது முறையாக ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு உரிய நாள் ஜூன் 12ஆம் தேதியாகும். இதற்கு முன்பு சரியான தேதியில் 18 முறையும், அதற்கு முன்னதாகவே 11 முறையும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. காலதாமதமாக 60 முறையும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது ஜூன் 12ஆம் தேதியன்று சரியான நாளில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. சரியான நாளில் தண்ணீர் திறப்பது இது 19ஆவது முறையாகும்.

மோடி மீது அமித்ஷவிற்கு என்ன கோபம்? எல்.முருகன், தமிழிசை பிரதமராக வாய்ப்பு... மு.க.ஸ்டாலின்

டெல்டா பாசனத்துக்கு தண்ணீரை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் மேட்டூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “திமுக ஆட்சியில் கட்டப்பட்ட கோயம்பேடு பேருந்து நிலையத்தை ஜெயலலிதா திறந்து வைத்தார், திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக அவர் மாற்றினார். திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை வெளிப்படையாக எதிர்த்த ஜெயலலிதா, பின்னர் கல்வெட்டில் தனது பெயரைப் பொறித்து திறந்து வைத்தார்; இந்த வரலாறு எல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிய வாய்ப்பு இல்லை.” என்றார்.

முன்னதாக, சேலம் மாவட்டம் எடப்பாடியில் பேசிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “எங்களது ஆட்சியிலாவது மக்களுக்கான திட்டங்கள் அத்தனை ஏற்படுத்தியிருந்தோம். ஆனால் இந்த ஆட்சியில் மக்களுக்கான திட்டங்களைத் தவிர்த்துவிட்டு, தங்கள் குடும்பத்துக்கான திட்டத்தை மட்டும்தான் செயல்படுத்தி வருகிறார்கள். சேலத்திற்காக எதாவது திட்டங்களை அறிவித்து முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி உள்ளாரா என்றால், ஒன்றுமே இல்லை. நாங்கள் எங்களது ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களைத்தான் செயல்படுத்துகிறார்கள். இது எப்படி இருக்கிறது என்றால், நாங்க பெத்த புள்ளைக்கு ஸ்டாலின் பெயர் வைப்பது போன்று உள்ளது.” என்றார்.

எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சுக்கு தற்போது மேட்டூரில் முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios