தலைமை செயலகத்தில் அதிகாரி வேலை வாங்கி தருவதாக 50க்கும் மேற்பட்டோரிடம் ரூ.3 கோடிக்கு மேல் மோசடி செய்த போலி ஐஏஎஸ் அதிகாரியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். உடந்தையாக இருந்த வாலிபரையும் பிடித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (28). கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

அதில், நாகப்பன் என்பவர் எனக்கு அறிமுகமானார். அவர், ஐஏஎஸ் அதிகாரியாக வேலை செய்து வருவதாகவும், எனக்கு தலைமை செயலகத்தில் அரசு வேலை வாங்கி தருவதாகவும் கூறினார்.

அவரது பேச்சை நம்பி,  நான் எனது நண்பர்கள் உட்பட 11 பேர், அரசு வேலைக்காக ரூ.45 லட்சத்தை நாகப்பனிடம் கொடுத்தோம். ஆனால், சொன்னபடி எங்களுக்கு அவர் வேலை வாங்கி தரவில்லை. நாங்கள் கொடுத்த ரூ.45 லட்சத்தை திரும்ப கேட்டபோது அவர் கொலை மிரட்டல் விடுக்கிறார். எனவே அவரிடம் இருந்து பணத்தை திரும்ப பெற்று தரவேண்டும் என கூறியிருந்தார்.

அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசரித்தனர். அதில், நாகப்பன் (28), திருவண்ணாமலை மாவட்டம் கோட்டையூர் பகுதியை சேர்ந்தவர் என்றும், எம்ஏ படித்து விட்டு தான் ஒரு  ஐஏஎஸ் அதிகாரி என்று கூறி பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்து வந்தது தெரியவந்தது. 

இதையடுத்து, போலி ஐஏஎஸ் அதிகாரி நாகப்பனை தலைமை செயலகம் அருகே சுழல் விளக்கு காரில் வரும்போது வழிமறித்து அதிரடியாக கைது செய்தனர். மோசடிக்கு பயன்படுத்திய கார் மற்றும் சிவப்பு சுழல் விளக்கு, போலி ஐஏஎஸ் அதிகாரியின் அடையாள அட்டையும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த தி.நகர் துரைசாமி சாலையை சேர்ந்த கார்த்திக் (26) என்ற வாலிபரையும் போலீசார் பிடித்துள்ளனர்.

போலுசாரின் விசாரணையில், வேலை தேடும் வாலிபர்களிடம் நாகப்பன், தான் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று உத்தரபிரதேசம் கேடரில் தேர்வாகி அதிகாரியாக பணியாற்றி வருவதாகவும், தற்போது சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் பணியாற்றி வருவதாகவும் கூறியுள்ளார்.

அதற்கு ஆதாரமாக, தலைமை செயலகத்தில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளுடன் ஒன்றாக இருப்பது போல் புகைப்படம் எடுத்து, அதை வேலை தேடும் வாலிபர்களுக்கு அனுப்பி தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்று காட்டியுள்ளார். 

மேலும், அதை உறுதிப்படுத்தும் வகையில், சிவப்பு சுழல் விளக்கு பொருத்தப்பட்ட காரில் வந்துதான் வாலிபர்களிடம் பேசியுள்ளார். வேலைக்காக பணத்தை கொண்டு வரும் வாலிபர்களிடம் பணத்தை அவர் தலைமை செயலகத்தில் வைத்து வாங்கி உள்ளார்.

இதனால் யாருக்கும் நாகப்பன் மீது சந்தேகம் வரவில்லை. இதுபோல் கடந்த 3 ஆண்டுகளாக 50க்கும் மேற்பட்ட பட்டதாரி வாலிபர்களிடம் ரூ.3 கோடிக்கு மேல் மோசடி செய்தது தெரியவந்தது.
இதுதவிர நாகப்பன் வேலை கேட்டு வரும் வாலிபர்களை தன் வயப்படுத்தி ஓரின சேர்க்கையிலும் ஈடுபட்டது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Attachments area