இப்படி நடக்கும்னு எதிர்ப்பார்க்கல! அதுதான் வெள்ளம் ஏற்படவும் காரணம்! பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த தமிழக முதல்வர் பேச்சு...
எதிர்பாராதபோது தென்மேற்குப் பருவமழை அதிகமாக பொழிந்ததால்தான் அணைகள் நிரம்பி முழு கொள்ளளவு எட்டப்பட்டது. உபரிநீரும் திறந்துவிடப்பட்டது. இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டனர்.
எதிர்பாராதபோது தென்மேற்குப் பருவமழை அதிகமாக பொழிந்ததால்தான் அணைகள் நிரம்பி முழு கொள்ளளவு எட்டப்பட்டது. உபரிநீரும் திறந்துவிடப்பட்டது. இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டனர் என்று ஈரோட்டில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
காவிரி மற்றும் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிப்படைந்தப் பகுதிகளைப் பார்வையிட நேற்று ஈரோடு வந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அங்கு ஈரோடு மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர், அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அதில், "காவிரி மற்றும் பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் ஈரோட்டில் சுமார் 50 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு 2335 குடும்பங்களைச் சேர்ந்த 3375 ஆண்கள், 3133 பெண்கள் மற்றும் 1324 சிறுவர்கள் என மொத்தம் 7832 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் 67 முகாம்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
முகாமில் தங்கியிருக்கும் அனைவருக்கும் உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கான பால், ரொட்டி போன்றவையும் பெண்களுக்குத் தேவையான சானிட்டரி நாப்கின்களும் வழங்கப்படுகின்றன. இவர்களுக்கு முகாமில் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கழிப்பிட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. முகாமில் தங்கியிருக்கும் அனைவருக்கும் காவல் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
காவிரி மற்றும் பவானி ஆறுகள் சேறுமிடமாக உள்ளது பவானி நகர். இரண்டு ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோர பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரையோர வீடுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் நிரந்த வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர். அவர்களின் கோரிக்கையை அரசு பரிசீலனை செய்து பாதுகாப்பான இடத்தில் நிரந்தர அடுக்குமாடிக் குடியிருப்புகளை கட்டித்தரப்படும்.
பவானியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவது புதிதல்ல. நான் சிறுவனாக இருக்கும்போதே பவானியைப் பற்றி எனக்குத் தெரியும். இங்குள்ளப் பள்ளிக் கூடத்தில்தான் ஆறாம் வகுப்பு முதல் 11–ஆம் வகுப்பு வரை படித்தேன். அதற்கு மேல் பட்டப் படிப்பையும் பவானியில் தங்கியிருந்துதான் படித்தேன். எனவே, இங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் எப்படி தண்ணீர் புகுந்து மக்கள் பாதிக்கப்படுவார்கள்? என்பது நன்றாகவேத் தெரியும்.
ஆகாயத் தாமரை அதிகளவில் இருந்ததால் வெள்ளப் பெருக்கு ஏற்படவில்லை. எதிர்பாராதபோது தென்மேற்குப் பருவமழை அதிகமாக பொழிந்ததால் அணைகள் நிரம்பி முழு கொள்ளளவு எட்டப்பட்டது. உபரிநீரும் திறந்துவிடப்பட்டது. இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால்தான் கரையோரப் பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்டுத் தேவையான உதவிகளைச் செய்துவருகிறோம்" என்று அவர் கூறினார்.