மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு திமுக தார்மீக பொறுப்பேற்க வேண்டும் - அண்ணாமலை!
மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு திமுக தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
கோவை பாஜக வேட்பாளரும், அக்கட்சியின் மாநிலத் தலைவருமான அண்ணாமலை இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “1974ஆம் ஆண்டு திமுகவும் காங்கிரசும் திட்டமிட்டு சதி செய்துதான் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்திருக்கிறார்கள். இதில் திமுகவுக்கு முழு பங்களிப்பு இருக்கிறது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் நாடகத்திற்காக கச்சத்தீவை மீட்டு தாருங்கள் என பலமுறை கடிதம் எழுதியுள்ளார்.” என்றார்.
“கச்சத்தீவை இலங்கையிடம் கொடுக்க கருணாநிதியிடம் வெளியுறவு செயலாளர் ஆலோசனை நடத்தியுள்ளார். அன்று தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, கச்சத்தீவை கொடுக்க சம்மதம் இல்லை என கூறியிருந்தால் மத்திய அரசு அதனை கொடுத்திருக்க மாட்டார்கள். அரசியல் அழுத்தம் காரணமாக அவர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், அப்போது கச்சத்தீவை கொடுக்க சம்மதித்துவிட்டு இப்போது கடிதம் எழுதுகின்றனர்.” என அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: தமிழ்நாடு காங்கிரஸ் வலியுறுத்தல்!
இந்திய இறையாண்மை மீது திமுகவுக்கு நம்பிக்கை இருக்கிறதா என கேள்வி எழுப்பிய அண்ணாமலை, “ஆழ்கடலில் நடக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம் திமுக தான். மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு திமுக தார்மீக பொறுப்பேற்க வேண்டும். கச்சத்தீவை கொடுத்து விட்டதால், சர்வதேச எல்லையை தொடும் முன்னரே மீனவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். திமுகவின் முகத்திரையை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதே பாஜகவின் நோக்கம்.” என்றார்.
கட்சத்தீவை மீட்பது எங்களது முக்கிய நோக்கம் என்ற அண்ணாமலை, கச்சத்தீவு பிரச்னையை தீர்ப்பதற்கு என்னவெல்லாம் சாத்தியக்கூறுகள் இருக்கிறதோ, அது அனைத்தையும் மத்திய அரசு ஆராய்ந்துக் கொண்டிருக்கிறது. நிச்சயமாக நல்ல முடிவு எடுப்பார்கள் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.