சேலம் அஸ்தம்பட்டி மணக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி யோகேஸ்வரி . இவர் எம்.எஸ்.சி. பயோடெக்னாலஜி படித்துள்ளார். இவர்கள் குடும்பத்துடன் கடந்த சில ஆண்டுகளாக நாமக்கல்லில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் யோகேஸ்வரிக்கு கடந்த சனிக்கிழமை திடீரென்று காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை தொடர்ந்து காய்ச்சல் பாதிப்பு குறையாமல் இருந்தது.

இதையடுத்து நேற்று மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டார். அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதை உறுதி செய்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். 

ஆனாலும் சிகிச்சை பலன் இன்றி அவர் இன்று அதிகாலை 1.30 மணி அளவில் பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த அவரது உறவினர்கள் கதறிஅழுதனர்.

பின்னர் சேலம் மணக்காட்டில் உள்ள அவரது சொந்த வீட்டிற்கு உடலை எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.