Asianet News TamilAsianet News Tamil

எஸ்.எம்.எஸ் மூலம் சத்துணவு திட்டத்தை கண்காணிக்கும் முடிவு - விழுப்புரம் ஆட்சியர் விளக்கம்...

decision to monitor nutritional program through SMS - Villupuram Collector
decision to monitor nutritional program through SMS - Villupuram Collector
Author
First Published Jul 7, 2018, 11:14 AM IST


விழுப்புரம்

குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) மூலம் சத்துணவு திட்டத்தை கண்காணிக்கும் முறையை குறித்து விழுப்புரம் ஆட்சியர் சுப்பிரமணியன், அதிகாரிகளுக்கு விளக்கினார். 

விழுப்புரம் மாவட்டத்தில் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) மூலம் சத்துணவு திட்டத்தை கண்காணித்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். அப்போது அவர், "இத்திட்டத்தை இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்மூலம் பி.எஸ்.என்.எல். அமைப்புடன் இணைப்பு ஏற்படுத்தப்படும். 

ஒவ்வொரு பள்ளியிலும் எத்தனை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது என்பதை அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், இதர ஆசிரியர்கள் மூலம் கட்டணமில்லா குறுந்தகவல் வாயிலாக பெறப்படும் தகவலின் அடிப்படையில் கண்காணிக்க வேண்டும்.

தற்போது வட்டார அளவில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் http://bsnlsmsservice.com/mdm.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஆசிரியர்கள் மூலம் ஒன்றாம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை மாணவர்களின் எண்ணிக்கையை குறுந்தகவலாக அனுப்பியவுடன் இணையத்தில் மாணவர்களின் எண்ணிக்கை தானியங்கி முறையில் பதிவாகிவிடும். குறுந்தகவல் அனுப்பி வைப்பதற்கு எவ்வித கட்டணமும் பிடித்தம் செய்யப்பட மாட்டாது.

பள்ளியில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொள்ளாமல் சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் எண்ணிக்கையை மட்டுமே கணக்கில் கொண்டு குறுந்தகவல் அனுப்பி வைக்க வேண்டும். 

தற்போது வட்டார அளவில் தலைமை ஆசிரியர் மற்றும் இதர ஆசிரியர்களின் செல்போன் எண்களின் விவரம் 100 சதவீதம் முழுமையாக இணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பள்ளிக்கல்வித் துறையினர் முழு ஒத்துழைப்பு வழங்கி குறுந்தகவலை தினமும் அனுப்பி வைக்க வேண்டும். இதன்மூலம் மாநில அளவில் விழுப்புரம் மாவட்டம் 100 சதவீதம் என்ற இலக்கினை எளிதாக எட்டக்கூடிய வாய்ப்பு உள்ளது" என்று கூறினார்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ராஜேந்திரன் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios