தமிழகத்தில் 3 ஆம் அலையில் இறப்பு விகிதம் 10 மடங்கு குறைந்துள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் 3 ஆம் அலையில் இறப்பு விகிதம் 10 மடங்கு குறைந்துள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாளொன்றுக்கு புதிதாக 1 லட்சம் பேரை கண்டுபிடித்து பரிசோதனை செய்வது சவாலாக உள்ளது. கொரோனா பரிசோதனை முறையில் மாற்றம் கொண்டு வர பொது சுகாதாரத்துறை இயக்குநர் மற்றும் வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்துள்ளோம். வருங்காலங்களில் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் அனைவரும் கண்டிப்பாக பரிசோதனை செய்ய வேண்டும். அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் மற்றும் உடன் இருப்பவர்களும் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் சுவாசப் பிரச்னை என யாரேனும் வந்தால், அவர்களுக்கு கொரோனா அறிகுறி இல்லையென்றாலும் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் கூட்டம் சேரும் இடங்களில் பரிசோதனை எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட உள்ளது. இனி வரும் காலங்களில் கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்டு தளர்வுகள் அதிகரிக்கப்படும் என்பதால் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. டெல்டா மற்றும் ஒமிக்ரான் வகை பரவலிலும் தமிழகத்தில் 3ம் அலையில் இறப்பு விகிதம் 10 மடங்கு குறைந்துள்ளது. அதேபோல் நோய்த் தொற்று உள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விகிதமும் குறைந்துள்ளது.

தடுப்பூசி செலுத்தியதால் தான் இது சாத்தியமாகியுள்ளது. இருப்பினும் தமிழகத்தில் இன்னும் 1.13 கோடி மக்கள் 2ம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. தமிழகத்தில் இதுவரை 6.37 லட்சம் கர்ப்பிணி தாய்மார்களுக்கும், 5.05 லட்சம் பாலூட்டும் தாய்மார்களுக்கும், 3.74 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 18 முதல் 44 வயதுக்குள்ளிருக்கும் 100% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 15-17 வயதுள்ள 27.18 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 87 விழுக்காடு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. மீதமுள்ள 13 விழுக்காட்டினருக்கும் தடுப்பூசி செலுத்தினால் தான் சமூகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறும். என்று தெரிவித்துள்ளார்.