தமிழகத்தின், ஏழு மாவட்டங்களில் முற்றிலுமாக சீர் குலைத்து விட்டது கஜா புயல். பத்து நாட்களை கடந்தும் இன்னும் நிவாரண பணிகள் நிறைவடையாத நிலையில் மத்திய அரசு சார்பில் டேனியல் ரிச்சர்ட் தலைமையில் மத்திய குழுவினர் நேரில் சென்று சேத விபரங்களை மதிப்பிட்டனர். 

நீர் மேலாண்மை துறை, போக்கு வரத்து துறை, மின்சார துறை, பேரிடர்  மேலாண்மை துறை, மற்றும் வருவாய் துறையை சேர்ந்த பல மேல் அதிகாரிகள் இந்த குழுவில் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் இன்று முதல்வர் எடப்பாடி பழனியை சந்தித்து இது தொடர்பாக ஆலோசனையை தலைமை செயலகத்தில் மேற்கொண்டனர். இந்த ஆலோசனையில் மத்திய குழு உறுப்பினர்களுடன் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர் சி.வி. சண்முகம் இடம்பெற்றிருந்தனர்.

புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு முடிவுகள் மத்திய அரசின் சம்பந்த பட்ட துறைகளிடம் நேரில் வழங்கப்படும் என குழு தலைவர் ரிச்சர்ட் தெரிவித்தார். இந்த மத்திய குழு ஆய்வின் போது விவசாயத்தை பொறுத்தவரை தென்னை, வாழை, கரும்பு நெல், பலா, முந்திரி உள்ளிட்ட ஏராளமான பண பயிர்கள் மற்றும் ஊடு பயிர்கள், மரங்கள் முற்றிலும் சேதம் ஆகி உள்ளதை தங்களால் காண முடிந்தது என வேதனையோடு கூறினார். 

இது மட்டும் இன்றி, ஓலை குடிசைகள், ஓட்டு வீடுகள், தகர ஷெட்டுகள், உருக்குலைத்து போய் உள்ளது என்றும் பல்லாயிரக் கணக்கான சிறு மற்றும் பெரிய அளவிலான படகுகள் மீன் பிடி வலைகள் சேதமாகியுள்ளது என்றும் மத்திய குழுவினர் தெரிவித்தனர். 

ஆக மொத்தத்தில் கஜா புயல், தனது ருத்திர தாண்டவத்தை ஆடி தமிழகத்தின் முக்கிய விவசாய பகுதியை அழித்ததோடு மட்டும் இல்லாமல், அங்கு உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் கேள்வி குறியாக்கி உள்ளதை மத்திய குழுவினர் ஒப்புக்கொண்டுள்ளனர். 

இந்த அறிக்கையை பார்த்தாவது மத்திய அரசு மனம் இறங்கி, தேவையான நிதியை அளிக்குமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.