வெங்காயத்தை தொடர்ந்து பருப்பு விலையும் கடுமையாக உயர்ந்திருப்பது குடும்பத் தலைவிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .  வட மாநிலங்களில் இருந்து பருப்பு வரத்து வெகுவாக குறைந்துள்ளதன்  காரணமாக வரலாறு காணாத அளவுக்கு உளுத்தம் பருப்பு ,  துவரம் பருப்பு ,  உள்ளிட்ட பருப்பு வகைகள் விலை உச்சத்தை எட்டியுள்ளது.  சமீபத்தில் மழையின் காரணமாகவும் சாகுபடி இல்லாத காரணத்தாலும்  வரலாறு காணாத அளவுக்கு ஒரு கிலோ வெங்காயம் 200 ரூபாய்க்கு  விற்க்கப்பட்டுவருகிறது.  

இந்நிலையில் வெங்காயத்தை தொடர்ந்து பருப்பு வகைகளும் உச்சத்தை தொட்டுள்ளது .  கடந்த அக்டோபர் மாதம் வரை 90 ரூபாய்க்கு விற்கப்பட்ட முதல் ரக உளுத்தம்பருப்பு தற்போது 135 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது .  75 ரூபாய்க்கு விற்பனையான இரண்டாம் ரக உளுத்தம்பருப்பு 115 ரூபாய்க்கு விற்பனையாகிறது .   இதேபோன்று 95 ரூபாய்க்கு விற்பனையான முதல் ரக துவரம்பருப்பு 110 ரூபாய்க்கும் 75 ரூபாய்க்கு விற்பனையான இரண்டாம் ரக துவரம்பருப்பு 90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது . இந்நிலையில்  80 ரூபாய்க்கு விற்பனையான பாசிப்பருப்பு 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது .  

ஏற்கனவே பூண்டு ,  வெங்காயம் உள்ளிட்ட பொருட்கள் உச்சத்தை தொட்ட நிலையில் தற்போது பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் நடுத்தர மக்கள் ,  குடும்பப்பெண்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். பிறந்தநாள் மாதாந்திர குடும்ப செலவு இரட்டிப்பாகி உள்ளதால் சமையல் பட்டியலை மாற்றி விட்டதாக குடும்பத்தலைவிகள்  வேதனை தெரிவித்துவருகின்றனர்.  வெங்காயத்தைப் போலவே பூண்டு பருப்பு உள்ளிட்ட  பொருட்களின் விலை உயர்வையும்  கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.