திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி பொது மக்களுக்கு உதவி செய்வதில் மிகச் சிறந்து விளங்கி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு பெற்றோரிடம் சொத்தை எழுதிவாங்கிவிட்டு அவர்களை விரட்டி விட்ட மகனை நேரில் அழைத்து மீண்டும் பெற்றோருக்கே சொத்தை எழுதித் தர வைத்தார். மேலும் அந்த பெற்றோர் தங்குவதற்கும் ஏற்பாடு செய்து கொடுத்தார்.

அண்மையில் ஓபி அடிக்கும் அதிகாரிகளை வாட்ஸ்அப்பில் எச்சரிக்கை விடுத்து ஒழுங்காக பணிகளை செய்ய வைத்தார். இதே போல் இன்னும் ஏராளமான நன்மைகளை பொது மக்களுக்கு செய்து வருகிறார்.

இந்த நிலையில், திருவண்ணாமலையில் குடும்பத்தாரால் கைவிடப்பட்டு பிச்சை எடுத்துக்கொண்டிருந்த முதியவருக்குத் ஆட்சியர் உதவியுள்ளார். திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த அந்த முதியவரைப் பார்த்த ஆட்சியர் கந்தசாமி அவரிடம் சென்று பேசியுள்ளார். முதியவரைப் பார்த்து ‘ஏன் இவ்வாறு பிச்சை எடுக்கிறீர்கள்? உங்களுக்குக் குடும்பம் இல்லையா?’ என்று விசாரித்துள்ளார்.

இதற்கு அந்த முதியவர், தன் பெயர் கோவிந்தசாமி, கீழ்சிறுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் தனக்கு யாரும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்ட ஆட்சியர் அரசு நடத்திவரும் முதியோர் இல்லத்தில் சேர்ப்பதாகத் தெரிவித்துள்ளார். மூன்று வேளை உணவுடன் மாதா மாதம் உதவித் தொகை கொடுப்பதாகவும் ஆறுதல் கூறியுள்ளார்.

ஆட்சியர் கூறியதை ஏற்று முதியோர் இல்லத்துக்குச் செல்ல கோவிந்தசாமி ஒப்புக்கொண்டார் அதன்படி மலப்பாம்பாடியில் உள்ள முதியோர் இல்லத்தில் அந்த முதியவரைச் சேர்த்த ஆட்சியர் அவரை கவனித்துக்கொள்ள வேண்டும் என்று அங்குள்ள ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும் அவருக்கு மாதா மாதம் உதவித் தொகை வழங்கவும் கரெக்டர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் கந்தசாமியின் இந்த செயலுக்குத் திருவண்ணாமலை மக்கள் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.