சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி: போலீசாருக்கு நீதிமன்றம் கண்டிஷன்!

சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது

Coimbatore court allows one day police custody to savukku shankar with condition

காவல் துறை உயர்அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாக பிரபல யூடியூபர் சவுக்கு  சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் நீதிமன்ற காவலில் கோவை மத்திய  சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, கைது நடவடிக்கையின் போது சவுக்கு சங்கரின் காரில் இருந்த அரை கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன்பேரில், சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து சி.எம்.டி.ஏ.வின் ஆவணங்களை போலியாக தயாரித்து அவதூறு பரப்பி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியதாக சிஎம்டிஏ அதிகாரிகள் கொடுத்த புகாரிலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 7 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை  மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்  உத்தரவிட்டுள்ளார். அதன்படி அவர் மீது குண்டாஸ் சட்டமும் பாய்ந்துள்ளது.

இந்த நிலையில், சவுக்கு சங்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோவை நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர்.  இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை போலீசாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி வழங்கவில்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்!

இந்த வழக்கு விசாரணைக்கு சவுக்கு சங்கர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தார். வழக்கு விசாரணையின்போது, போலீசார் தன்னை துன்புறுத்துவதாகவும், தாக்குவதாகவும் சங்கர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, போலீஸ் காவல் விசாரணையின்போது 3 மணிநேரத்திற்கு ஒருமுறை அவரது வழக்கறிஞர் அவரை சந்தித்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நீதிமன்றத்துக்கு வந்த சவுக்கு சங்கர் கையில் மாவுக்கட்டுடன் வந்தார். அப்போது, தனது கையை உடைத்தது கோவை சிறைத்துறை கண்காணிப்பாளர் செந்தில் குமார் என கூறியவர், கோவை சிறையில் தன்னை கொலை செய்துவிடுவார்கள் எனவும் புகார் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios