Asianet News TamilAsianet News Tamil

முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா..? முதலமைச்சர் நாளை ஆலோசனை..வெளியான முக்கிய அப்டேட்..

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத்துறை வல்லுனர்கள் பங்கேற்க உள்ளனர்.
 

CM meeting tomorrow about Corona lockdown extension
Author
Tamilnádu, First Published Jan 26, 2022, 5:00 PM IST

தமிழகத்தில் டெல்டா வகை கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றாலும் கொரோனா தொற்று பரவலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

தமிழகம் முழுவதும் நேற்று ஒரேநாளில் 30,055 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31,94,260ஆக அதிகரித்துள்ளது. 29,45,678 பேர் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். அத்துடன் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,312 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகம் முழுவதும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணிவரை இரவு ஊரடங்கு அமலில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.தொற்று பரவல் தொடர்ந்து குறையும் பட்சத்தில் ஞாயிறு முழு ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு ஆன்லைனில் வகுப்புகள் நடைபெறுகின்றன. இறுதி பருவத்தேர்வு தவிர அனைத்து பருவத்தேர்வுகளும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் முறையில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவில்கள், வழிபாட்டுத்தலங்களில் வெள்ளி, சனி ஞாயிற்றுக்கிழமைகளில் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ,திருவள்ளூர் ,கோவை ,திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொற்று பாதிப்பு சற்று குறைய தொடங்கியுள்ளது.

இந்நிலையில் ஜனவரி 31ஆம் தேதியுடன் தமிழகத்தில் ஊரடங்கு முடிவுக்கு வர உள்ள நிலையில் அதை நீட்டிப்பது குறித்தும், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் நாளை காலை ஆலோசனை நடைபெறவுள்ளது. கொரோனா ஊரடங்கை மேலும் நீட்டித்து புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது.

இதில் முழு ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ,சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios