வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் 4ம் சேத்தி கோவில் குளத்தைச் சேர்ந்தவர் சச்சிதானந்தம். இவரது மனைவி காந்திமதி (80). இவர்களது மகன் கரிகாலன் (60), மகள் சரஸ்வதி (55).

சச்சிதானந்தம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இதையடுத்து காந்திமதி, மகன் கரிகாலன் வீட்டில் வசித்து வந்தார். அப்போது, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் மகள் சரஸ்வதிக்கு ரூ.15 ஆயிரம் கொடுத்துள்ளார்.

இதை அறிந்த மகன் கரிகாலன், தாயிடம் தகராறு செய்துள்ளார். இதனால் காந்திமதி, கோபித்து கொண்டு மகள் சரஸ்வதி வீட்டில் தஞ்சமடைந்தார். இதையடுத்து கரிகாலன் கடந்த 15 ஆண்டுகளாக தாயை வந்து பார்க்கவில்லை.

இந்நிலையில், காந்திமதி கடந்தசில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இதையொட்டி நேற்று இறந்தார்.

தகவலறிந்த கரிகாலன், தாயின் சடலத்தை தனது ஊருக்கு கொண்டு சென்று இறுதி சடங்கு செய்ய முடிவு செய்தார். ஆனால் காந்திமதி இறப்பதற்கு முன், இறுதி சடங்குகளை மகள் சரஸ்வதியே செய்ய வேண்டும் என கூறியதாக தெரிகிறது.

இதைதொடர்ந்து இறந்த தாயை தனது வீட்டிற்கு வந்து அண்ணன் பார்க்கக்கூடாது என்றும், சுடுகாட்டிற்கு வேண்டுமானால் வரட்டும் என சரஸ்வதி கூறிவிட்டார். பிறகு தாயின் இறுதி சடங்கை தானே முன்னின்று செய்ததார்.

மகன் இருக்கும் நிலையில் மகள் தாய்க்கு இறுதி சடங்கு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.